ஆபாச பட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பா? – காவல்துறை விளக்கம்

சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் இளம் பெண்களையும், மாடல் அழகிகளையும் ஆபாச படங்களில் நடிக்க வைத்து, அவற்றை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்த புகாரில் பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா கைதாகி இருப்பது பாலிவுட் பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு ஆபாச படத்துக்கு ரூ.5 லட்சம் வரை அவருக்கு கிடைத்ததாக கூறப்படுகிறது. ராஜ்குந்த்ராவை போலீஸ் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆபாச படம் எடுத்ததில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? அல்லது அவருக்கு தெரியாமலேயே ராஜ்குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்தாரா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை இணை கமிஷனர் மிலிந்த் பரம்பே இதுகுறித்து அளித்த பேட்டியில், “ஆபாச பட வழக்கில் ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பு உள்ளதா? என்று இதுவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

ராஜ்குந்த்ராவுக்கும், ஷில்பா ஷெட்டிக்கும் 2019-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஷில்பா ஷெட்டி தமிழில் விஜய்யின் குஷி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.