ஆந்திர வெள்ள நிவாரணத்திற்கு உதவும் நடிகர் பிரபாஸ்

‘பாகுபலி’ படம் மூலம் பிரபலமான பிரபாஸ் அதிக சம்பளம் பெறும் நடிகராக மாறி இருக்கிறார். இவர் நடிக்கும் படங்களை தெலுங்கில் மட்டுமின்றி பிற மொழிகளிலும் வெளியிட்டு லாபம் பார்க்கிறார்கள்.

தற்போது ‘ராதேஷ்யாம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ராமாயண கதையான ஆதிபுருஷ் மற்றும் சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமராக நடிக்க பிரபாசுக்கு ரூ.150 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வேறு இந்திய நடிகர்கள் யாரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெற்றது இல்லை. இந்த நிலையில் ஆந்திராவில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக ஆந்திர முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்குவதாக பிரபாஸ் அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, மகேஷ் பாபு, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் தலா ரூ.25 லட்சம் வெள்ள நிவாரண நிதி வழங்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.