ஆசிய விளையாட்டு போட்டிகள் – இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்து பதக்கம் வென்றது
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது.
தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா 46 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 42 ரன்னும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை. இலங்கை அணி சார்பில் பிரபோதினி, சுகந்திகா குமாரி, ரனவீரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணி சார்பில் களமிறங்கிய சமாரி மற்றும் அனுஷ்கா முறையே 12 மற்றும் 1 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த விஷ்மியும் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார். பிறகு வந்த ஹாசினி மற்றும் நிலாக்ஷி முறையே 25 மற்றும் 23 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்தடுத்து வந்தவர்கள் அதிக ரன்களை எடுக்காத நிலையில், இலங்கை அணி தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தது. அதன்படி 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்களை இழந்து வெறும் 97 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய டிடாஸ் சத்து மூன்று விக்கெட்களை கைப்பற்றினார். ராஜேஷ்வரி கெய்க்வாட் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார். தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ரக்கர் மற்றும் தேவிகா வைத்யா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன் மூலம் இந்திய அணி இறுதி போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இருப்பதை அடுத்து, இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது.