அவதூறு செய்தி பரப்பிய யூடியுப் சேனல் மீது ரூ.500 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்த அக்‌ஷய் குமார்

பீகாரை சேர்ந்த ரஷித் சித்திக் என்ற வாலிபர் எப்.எப். நியூஸ் என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகிறார். அதில் அவர் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக பல்வேறு தவறான தகவல்களைத் தெரிவித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக நடிகர் சுஷாந்த் சிங் கொலை செய்யப்பட்டார், அந்த கொலையில் முக்கிய பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக ஆதாரமற்ற தகவல்களைக் கூறி வந்தார்.

சுஷாந்த் சிங் வழக்கில், அவரது காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி நாடு விட்டு தப்பிக்க பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் உதவியதாகவும், சுஷாந்தின் மரணம் குறித்து முதல் மந்திரி உத்தவ் தாக்கரே மற்றும் மந்திரி ஆதித்ய தாக்கரே ஆகியோருடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், எம்.எஸ்.தோனி படத்தில் நடிக்க சுஷாந்த் சிங் தேர்வானதில் அக்‌ஷய் குமாருக்கு ஏற்பட்ட அதிருப்தியே இதற்கு காரணம் என்றும் ரஷித் சித்திக் தனது சேனலில் கூறினார்.

இவ்வாறு பரபரப்பு செய்தியை வெளியிட்டதால் அவரது யூ டியூப் சேனலை அதிகம் பேர் பார்க்கத் தொடங்கினர். இதனால் அவர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னை பற்றி அவதூறு செய்திகளைப் பரப்பியதாக ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என ரஷித் சித்திக்கிற்கு பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அவர் சட்டநிறுவனம் மூலமாக அந்த நோட்டீசை அனுப்பி உள்ளார்.

அந்த நோட்டீசில், ரஷித் சித்திக்கின் போலி மற்றும் அவதூறு வீடியோக்களால் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கம், மன அழுத்தம் போன்றவற்றால் ரூ.500 கோடி அளவுக்கு அக்‌ஷய் குமார் இழந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதேபோல ரஷித் சித்திக் தனது செயலுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 3 நாட்களுக்கு நோட்டீசுக்கு பதில் அளிக்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மந்திரி ஆதித்ய தாக்கரே மற்றும் மும்பை போலீசாருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக ரஷித் சித்திக் மீது ஏற்கனவே மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.