அழாத பிள்ளைக்கும் பால் தரும் தாய் தான் திமுக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காது கேளாதோர் வாரத்தையொட்டி மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக ரூ.98.80 லட்சம் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் குறைபாடு கண்டறியும் கருவிகள் மற்றும் உயர்தர அறுவை சிகிச்சை கருவிகள் வழங்கினார்.

மேலும் சென்னை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவ மையத்தை திறந்து வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது:-

உலக காதுகேளாதோர் வாரம் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 20 முதல் 26 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பற்றி நான் சொல்ல வேண்டும் என்றால், ஏதோ இந்த ஒரு வாரம் மட்டும் மக்களைக் கவனிக்கும் அரசு அல்ல; தொடர்ந்து மக்களை கவனித்துக்கொண்டு இருக்கக்கூடிய அரசு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

குறிப்பாக, ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய மக்களைக் கைதூக்கி விடும் அரசாகத்தான் திராவிட முன்னேற்றக்கழக அரசு இருக்கிறது. எப்போது எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருந்திருக்கிறதோ, அப்பொழுது எல்லாம் அதை தொடர்ந்து நாம் நிறைவேற்றி கொண்டும் இருக்கிறோம்.

தலைவர் கலைஞர் முதல் முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றபோது நான் ஒரு இளைஞனாக இருந்தேன். இப்போதும் நான் அப்படி தான் இருக்கிறேன். தலைவர் கலைஞர் முதல்முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் தன்னுடைய பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் தனக்காக கொண்டாடாமல், தன்னுடைய பெருமைகளை மட்டுமே எடுத்துச் சொல்லும் விழாவாக நடத்தாமல், அந்த விழா மக்களுக்கு பயன்பட வேண்டும், மக்களுக்காக கொண்டாடப்பட வேண்டும் என்ற நிலையிலே, பல திட்டங்களை தனது பிறந்தநாள் மூலமாக நாட்டுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

காதுகேளாதவர்க்குக் கருவி மாட்டுவோம். இதுதான் திராவிட முன்னேற்றக்கழக அரசு. பெரிய வி‌ஷயங்களைப் பார்க்கும்போது சின்ன வி‌ஷயங்கள் கண்ணுக்குத் தெரியாது என்பார்கள். அது தவறானது, ‘திராவிட மாடல்’ ஆட்சியில் பெரியவை மட்டுமல்ல சின்னவையும் தெரியும். அனைவரது கோரிக்கைக்கும் செவிமடுக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே ஒரு உதாரணமாக அமைந்திருக்கிறது.

இந்த உயரிய நோக்கத்தை மொத்தமாகச் செயல்படுத்துவதற்காகத்தான் 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் உருவாக்கிக் கொடுத்தார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், காது நுண் எலும்புக்கருவி பொருத்தும் அறுவை சிகிச்சை இதுவரையில் 4,101 குழந்தைகளுக்குச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை 327 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சைக்காக 6 லட்சத்து 36 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அறுவைச் சிகிச்சை செய்ய இயலாத குழந்தைகளுக்கு உயர் சிகிச்சை செய்யப்படுகிறது. அதற்கு 4 கோடி ரூபாய் இதுவரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழுதடைந்த உபகரணங்களை மாற்றித் தருவதற்காக 3.62 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ், இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரத்து 572 பேருக்கு 108 கோடி ரூபாய் செலவில் புதிய காது கேட்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மேலும் தொடருவதற்காக அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் நவீன கருவிகளை வாங்குவதற்கு 10 கோடி ரூபாய் இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, கிருஷ்ணகிரி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு 98.9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர செவித்திறன் கருவிகளை நான் வழங்கி இருக்கிறேன். புதிய காது கேட்கும் கருவிகளை வழங்கி இருக்கிறேன். பழுதடைந்த கருவிகள் மாற்றித் தரப்பட்டுள்ளது.

புதிதாக அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் கருவிகள் தரப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு முறையான பயிற்சி மூலமாக பேசும் திறனைப்பெற்று வரும் குழந்தைகளைக் கண்டு மகிழ்கிறேன்; விரைவில் நீங்கள் முழுமையாகக் குணமடைய என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சில வாரங்களுக்கு முன்பு, அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்களின் அழைப்பையேற்று கிருஷ்ணகிரிக்கு சென்றேன். அங்கே மக்கள் பயன்பெறும் வகையிலே மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். இன்றைக்கு அந்தத் திட்டம்தான் தமிழ்நாடு அரசுக்குப் மிகப்பெரிய பேரும் புகழும் ஈட்டித்தந்து கொண்டு இருக்கிறது என்பதை நான் பெருமையோடு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நாள்தோறும் கிராமம் கிராமமாக தொகுதித் தொகுதியாக தெருத் தெருவாக நம்முடைய மக்கள் நல்வாழ்வுத் துறையினர் சென்று மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளித்து வருகிறார்கள். இதுவரை சுமார் 10 லட்சம் பேர் இந்த திட்டத்தின் மூலமாகப் பயனடைந்துள்ளார்கள்.

மருத்துவமனைக்கு வர முடியாதவர்கள் பணம் இல்லாதவர்கள் தீராத நோயாளிகள் ஆகியோருக்கு அவர்களது கவலை போக்கும் திட்டமாக இந்தத் திட்டம் இருக்கிறது.

அரசைத் தேடி மக்கள் வந்த காலம் இருந்தது இப்போது அதை மாற்றி மக்களைத் தேடி அரசு செல்லும் காலமாக இந்த ஆட்சி உருவாக்கி இருக்கிறது. இந்த மாற்றத்துக்கு நேரம் காலம் பார்க்காமல் உழைத்து கொண்டு இருக்கக்கூடிய நம்முடைய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உங்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன். அந்த அளவிற்கு அவர் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.

சட்டமன்றத்தில் எந்த அமைச்சர்களையும் எதிர்கட்சியினர் புகழ்ந்து பேசுவது கிடையாது. நம்முடைய மா.சுவைதான் சட்டமன்றத்தில் புகழ்ந்து பேசுகிறார்கள். பா.ஜ.க.வைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் சட்டமன்றத்தில் மாசு இல்லாதவர் மா.சு என்று பாராட்டினார். அவருக்குத் துணை நின்று பணியாற்றி கொண்டு இருக்கக்கூடிய அதிகாரிகளையும் நான் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

“அழுத பிள்ளைதான் பால் குடிக்கும் என்பார்கள். அழாத பிள்ளைக்கும் பால் கொடுப்பவள்தான் உண்மையான தாய். அத்தகைய தாயாக தி.மு.க. அரசு என்றைக்கும் இருக்கும்”. தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள், ஏழை எளிய விளிம்புநிலை மக்களையும் அன்போடு அரவணைத்து அவர்களுக்கு அனைத்துமாக இருக்கும் அரசாக தி.மு.க. அரசு நிச்சயம் இருக்கும் என்று சொன்னார்கள். அதைத்தான் நானும் வழிமொழிந்து உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன்! நன்றி, வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.