அரிசிக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு – இன்று முதல் அரிசி விலை உயர்ந்தது

சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி மற்றும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் தானியங்கள், உணவு பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு நடைமுறை இன்று (18-ந்தேதி) முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று முதல் அரிசி, தானியங்கள் மற்றும் உணவுப்பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டது. இதன் காரணமாக அதன்விலை 5 சதவீதம் அதிரடியாக உயர்ந்தது. 25 கிலோ கொண்ட அரிசி மூட்டை ஏற்கனவே ரூ.1000 முதல் ரூ.2,500 வரை விற்கப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் அரிசி மூட்டை விலை இன்று அதிரடியாக 5 சதவீதம் விலை உயர்ந்தது.

ரூ.1000-க்கு விற்கப்பட்ட மூட்டை அரிசி இன்று ரூ.1050-க்கு விற்கப்படுகிறது. அதே போல் ரூ.3000-க்கு விற்கப்பட்ட அரிசி மூட்டை ரூ.3,150-க்கு விற்கப்படுகிறது. ஒரு மூட்டைக்கு விலை ரூ.50 முதல் ரூ.150 வரை அதிகரித்துள்ளது. அதேபோல் பிராண்ட் அரிசி சில்லரை விலையில் ஒரு கிலோ ரூ.40 முதல் அரிசி விற்கப்படுகிறது. அந்த அரிசி ரூ.42 ஆக உயர்ந்தது.

அதேபோல் கோதுமை விலையும் இன்று உயர்ந்தது. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் கோதுமை மாவு இதுவரை கிலோ ரூ.65-க்கு விற்கப்பட்டு வந்தது. அது ரூ.68 ஆக அதிகரித்துள்ளது. இதே போல் அரை லிட்டர் தயிர் இதுவரை ரூ.35-க்கு விற்கப்பட்டு வந்தது. அது ரூ.37 ஆக அதிகரித்துள்ளது. இதே போல் மோர், லஸ்சி விலையும் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.

பன்னீர் தற்போது ரூ.105-க்கு விற்கப்படுகிறது. அது ரூ.110 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. பருப்பு வகைகள் ஏற்கனவே கிலோ ரூ.130-க்கு விற்கப்படுகிறது. தற்போது ரூ.137 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதர பருப்பு வகைகளும் கிலோவுக்கு ரூ.5 முதல் உயர்த்தப்பட்டுள்ளது. கடைகளில் ஏற்கனவே இருக்கும் பருப்பு, கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அதே விலைக்கே விற்கப்படும். அவை மீண்டும் புதிதாக வரும் போது விலை உயர்ந்துவிடும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

அச்சுப்பிரதி எழுத அல்லது வரைவதற்கு பயன்படும் மை, கத்திகள், பென்சில், ஷார்ப்பனர், கரண்டிகள், முள் கரண்டி, எல்.இ.டி. விளக்குகள், படம் வரைவதற்கான உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த பொருட்களின் விலை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. காசோலைகளை வழங்க வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்துக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டது. இதனால் காசோலை பெறுவதற்கான கட்டணம் இன்று 18 சதவீதம் அதிகரித்தது. சாலைகள், பாலங்கள், ரெயில்வே, மெட்ரோ, சுத்தி கரிப்பு ஆலைகள், மயான கட்டுமான பணி ஒப்பந்தங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இனி இவற்றின் கட்டுமான செலவுகள் 6 சதவீதம் அதிகரிக்கும். ரிசர்வ் வங்கி, ஐ.ஆர்.டி.ஏ. செபி போன்ற ஒழுங்கு நடைமுறை அமைப்புகளின் சேவைகளுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. உயிரி மருத்துவ கழிவு சுத்திகரிப்பு அமைப்புகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000-க்கும் குறைவான ஒரு நாள் வாடகை கொண்ட ஓட்டல் அறைகள், அட்லஸ், மேப் உள்ளிட்ட வரை படங்களுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப் பட்டுள்ளது. எனவே இனி ஓட்டல்களில் தங்குவதற்கு கூடுதல் செலவாகும்.

சூரிய சக்தியில் இயங்கும் சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் இவற்றின் விலை 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் ஒரு நாள் வாடகை கொண்ட மருத்துவமனை அறைகளுக்கும் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே இனி மருத்துவமனை அறை வாடகையும் உயரும்.

சரக்கு மற்றும் பயணிகள் சாலை போக்குவரத்து வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு வாகனங்கள், லாரிகளை வாடகைக்கு எடுப்பதற்கு விதிக்கப்பட்டு வந்த 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாகனங்களின் வாடகை குறைய வாய்ப்பு உள்ளது.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்கு வங்காளத்தின் பக்கோத்ரா நகரத்தில் இருந்து விமானத்தின் ‘எகானமி’ வகுப்பில் பயணம் செய்ய ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் பேட்டரி பொருத்தப்பட்டு அல்லது பொருத்தப்படாமல் இருந்தாலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் 5 சதவீத சலுகை பெற தகுதி அளிக்கப்பட்டுள்ளது.

அரிசிக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ராயபுரத்தை சேர்ந்த மொத்த அரிசி வியாபாரி செந்தில்குமார் கூறியதாவது:-

அரிசி விலைக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்திருப்பது சாமானிய மக்களையும், சில்லரை வியாபாரிகளையும் கடுமையாக பாதிக்கும். பொது மக்கள் இதுவரை மூட்டை ரூ.1000 முதல் ரூ.3000 விலை கொண்ட அரிசிகளை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். இந்த அரிசிக்கு இனி ரூ.50 முதல் ரூ.150 வரை அதிகமாக விலை கொடுக்க வேண்டி இருக்கும். இதனால் சாமானிய மக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். இதனால் அவர்கள் சிரமத்துக்கு ஆளாவார்கள். அதேபோல் அரிசி சில்லரை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். சில்லரையில் அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் செலவு போக தினமும் ரூ.500 கிடைத்தால் போதும் குடும்பம் நடத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள். பெரும்பாலான அரிசி வியாபாரிகள் இந்த நிலையில் தான் உள்ளனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் இனி அவர்கள் பில் போட கம்ப்யூட்டர் பயன்படுத்தி ஜி.எஸ்.டி. வரியை கணக்கிட தனியாக ஆள் போட வேண்டி வரும். தினமும் 500 மட்டுமே சம்பாதிக்கும் வியாபாரிகளால் இனி கடையை நடத்த முடியாத நிலை ஏற்படும். அவர்களின் வாழ் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.