அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் உள் ஒதுக்கீடு – டாக்டர்.ராமதாஸ் அறிக்கை

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மருத்துவ உயர்சிறப்பு படிப்புகளுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டு டாக்டர்களின் உயர்சிறப்பு மருத்துவக்கல்வி கனவுக்கும், சமூகநீதிக்கும் எதிரான மத்திய அரசின் இந்த நிலைப்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள உயர்சிறப்பு படிப்புக்கான இடங்களை மத்திய அரசு நிரப்புவதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர்களுக்கு 20 சதவீத இடங்கள் கூட கிடைப்பதில்லை. இதேநிலை நீடித்தால் இன்னும் சில 10 ஆண்டுகளுக்குப்பிறகு தமிழ்நாட்டில் உயர்சிறப்பு மருத்துவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். இது நல்லதல்ல.

மக்களுக்கு மருத்துவம் வழங்குவது மாநில அரசுகளின் கடமை. மாநில அரசுகள் அவற்றின் கடமையை செய்ய மத்திய அரசு உதவியாக இருக்க வேண்டும். மாறாக, அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொண்டு மாநில அரசுகளை அலங்கரிக்கப்பட்ட மாநகராட்சிகளாக மாற்ற முனையக்கூடாது. கூட்டாட்சி தத்துவத்தை அது சிதைத்து விடும். எனவே, உயர்சிறப்பு படிப்புகளை பொறுத்தவரை தமிழ்நாட்டிலுள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தும் அதிகாரத்தை தமிழக அரசிடமே மத்திய அரசு ஒப்படைக்கவேண்டும். அவற்றில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவும் ஒப்புதல் அளிக்கவேண்டும். இந்த அதிகாரங்களையும், உரிமைகளையும் மீட்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.