அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 – இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது

அயர்லாந்து சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. முதல் டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி டப்ளினில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 3 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து களம் இறங்கிய தீபக் ஹூடா சஞ்சு சாம்சனுடன் இணைந்து அயர்லாந்து பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். பவுண்டரிகள், சிக்சர்களாக பறக்கவிட்ட இந்த ஜோடி, 2வது விக்கெட்டுக்கு 176 ரன்கள் குவித்து அசத்தியது.

சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 77 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். தொடர்ந்து அதிரடி காட்டிய தீபக் ஹூடா 57 பந்துகளில் 6 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 15 ரன்னில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் டக் அவுட்டாகினர். இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்களை குவித்தது.

இதையடுத்து, 228 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பால் ஸ்டிர்லிங் 40 ரன்கள் அடித்தார். அதிகபட்சமாக கேப்டன் ஆன்டி பால்பிர்னி 60 ரன்கள் குவித்தார். ஹாரி டெக்டர் 39 ரன்களும், ஜார்ஜ் டாக்ரெல் 34 ரன்களும் எடுத்தனர்.

வெற்றி பெற கடைசி வரை அந்த அணி வீரர்கள் போராடினர். கடைசி ஓவரில் 1 பந்துக்கு 6 ரன் தேவைப்பட்ட நிலையில், அயர்லாந்து 2 ரன் மட்டுமே எடுத்து. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 221 ரன்கள் அடித்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.