அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகை காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால், திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, கமலுடன் இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.

இதுதவிர, ‘ரவுடி பேபி’ எனும் புதிய தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், ஒரு சிறுமிக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவுடி பேபியான அந்த சிறுமியையும், காஜல் அகர்வாலையும் மையப்படுத்தி தான் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் அம்மா வேடத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது  நடிகை காஜல் அகர்வாலும் அவ்வாறு நடிக்க சம்மதித்து இருப்பது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

ரவுடி பேபி படத்தை பல முன்னணி இயக்குனர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய ராஜா சரவணன் இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் படம் இதுவாகும். மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.