அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகரை தேர்வு செய்வதில் தொடர் இழுபரி!

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில் ஜனாதிபதி டிரம்பின் குடியரசு கட்சி 222 இடங்களையும், ஜனநாயக கட்சி 212 இடங்களையும் கைப்பற்றியது. இதன்மூலம் பிரதிநிதிகள் சபை குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது.

இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்றம் கூடியது. பிரதிநிதிகள் சபைக்கான புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. இதில் குடியரசு கட்சியின் சார்பில் அக்கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவர் கெவின் மெக்கார்த்தி போட்டியிட்டார். ஜனநாயக கட்சி சார்பில் ஹக்கீம் ஜெப்ரிஸ் களம் இறங்கினார்.

சபாநாயகரை தேர்வு செய்ய 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. குடியரசு கட்சிக்கு 222 உறுப்பினர்கள் இருப்பதால் கெவின் மெக்கார்த்தி எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குடியரசு கட்சியின் உறுப்பினர்கள் 20 பேர் கெவினுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனால் புதிய சபாநாயகரை தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

கடந்த 163 ஆண்டுகளில் சபாநாயகரை தேர்வு செய்ய முடியாமல் பாராளுமன்றத்தில் குழப்பமான சூழல் நீடிப்பது அமெரிக்காவில் இது முதல்முறை ஆகும். கடந்த 3 நாட்களில் 11 முறை ஓட்டெடுப்பு நடத்தியபோதும் சபாநாயகரை தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் பிரதிநிதிகள் சபை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.