அமெரிக்க ஓபன் டென்னிஸ் – முதல் சுற்றில் ஜோகோவிச் வெற்றி

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) பந்தாடினார். இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக ருசித்த 24-வது வெற்றி இதுவாகும். ஜோகோவிச் அடுத்து கைல் எட்மன்டை (இங்கிலாந்து) சந்திக்கிறார்.

64-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன், தன்னை எதிர்த்து ஆடிய தரவரிசையில் 22-வது இடம் வகிக்கும் ஜான் இஸ்னருக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார். 3 மணி 50 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஸ்டீவ் ஜான்சன் 6-7 (5-7), 6-3, 6-7 (5-7), 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இஸ்னர் 52 ஏஸ் சர்வீஸ்கள் போட்டும் பலன் இல்லாமல் போனது. 1991-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டம் ஒன்றில் ஒரு வீரர் விளாசிய 2-வது அதிகபட்ச ஏஸ் சர்வீஸ் இதுவாகும்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ரமோஸ் வினோலசை (ஸ்பெயின்) விரட்டியடித்தார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டேவிட் கோபின் (பெல்ஜியம்), ஜான் லினர்ட் ஸ்ரப் (ஜெர்மனி), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா) ஆகியோரும் முதல்தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒசாகா சக நாட்டவர் மிசாகி டோயை 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி 2 நிமிடங்கள் போராடி தோற்கடித்தார்.

‘தொடரில் முதல் சுற்று என்றாலே பதற்றம் இருக்கும். அதுவும் மிசாகி டோய், கடினமான எதிராளி. எனவே இந்த ஆட்டம் அதிக நேரம் நீடிக்க வாய்ப்பு உண்டு என்பதை அறிந்திருந்தேன். அதன்படியே ஆட்டம் கடினமாக இருந்தது’ என்று வெற்றிக்கு பிறகு ஒசாகா குறிப்பிட்டார்.

வளர்ந்து வரும் உள்ளூர் நட்சத்திரமான 16 வயதான கோரி காப்பின் கனவு முதல் சுற்றுடன் சிதைந்தது. அவரை லாத்வியா வீராங்கனை அனஸ்டசிஜா செவஸ்தோவா 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 7-ம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் கமிலியா பெகுவை (ருமேனியா) எளிதில் வென்றார். கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), அலிசன் ரிஸ்க் (அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா), முகுருஜா(ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.