Tamilசெய்திகள்

அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் மேடை சரிந்து விழுந்தது

சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலைய பகுதியில் பா.ம.க. கொடியேற்று விழா நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டார். விழாவில் அன்புமணி ராமதாஸ், அங்குள்ள கொடிகம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த விழா மேடையில் பேசுவதற்காக ஏறினார்.

அவருக்கு தொண்டர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரேநேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தொண்டர்கள் மேடையில் ஏறியதால், மேடை பின்பக்கமாக சரிந்தது. உடனே மேடையில் இருந்தவர்கள் ஆங்காங்கே குதித்தனர். மேடையில் நின்று கொண்டிருந்த அன்புமணி ராமதாஸ் தடுமாறினாலும் உடனே சுதாரித்துக்கொண்டு, மேடையின் முன்பக்கமாக குதித்தார்.

மேடை சரிந்து விழுந்தும் அவர் காயமின்றி தப்பினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த இடம் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்பிறகு திரண்டு இருந்த தொண்டர்கள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் பா.ம.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.