அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை படைத்த ஊராட்சி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆரணியை அடுத்து உள்ளது வெள்ளேரி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 412 வீடுகளும், 1,572 மக்களும் வசித்து வருகிறார்கள். 450 குடும்ப அட்டைகள் உள்ளன. இங்கு உள்ள அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசின் ‘ஜல்ஜீவன்’ திட்டத்தில் 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கிய ஊராட்சி மன்ற தலைவர் சுதா சுப்பிரமணியமிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது 100 சதவீதம் குடிநீர் இணைப்பு வழங்கியதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் சுதா சுப்பிரமணியம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெள்ளேரி ஊராட்சியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

ஊராட்சியில் உள்ள 412 வீடுகளுக்கும் இந்த திட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட அப்போதைய கலெக்டர் சந்தீப் நந்தூரி ஊக்கம் அளித்தார். அதன் பயனாக கடந்த ஜனவரி மாதமே பணிகள் முடிக்கப்பட்டு விட்டது.

ஊராட்சியில் ஏற்கனவே 4 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் இருந்தன. ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேலும் 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி புதிதாக கட்டப்பட்டு தற்போது 5 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன.

இதன் மூலம் ஒருநாளைக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நீரேற்றப்பட்டு, காலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் இரண்டு வேளை தினசரி தொடர்ந்து குடிதண்ணீர் வீட்டிற்கே சென்று அடையும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் மூலம் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் ரூ.47 லட்சம் செலவு செய்துள்ளது.

அனைத்து வீடுகளுக்கும் செக் வால்வுடன், பித்தளை குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 4 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மின் மோட்டார்கள் புதிதாக மாற்றி அமைக்கப்பட்டதால் தற்போது மின் கட்டணம் அதிக அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு வரை மின்சார கட்டணமாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை செலுத்தப்பட்டுவந்தது. தற்போது ரூ.80 ஆயிரமாக குறைந்துள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பராமரிக்கும் பணிக்கு ஒருவர் மட்டுமே இருந்தார். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கூடுதலாக 2 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜல்ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதால் அனைத்து வீடுகளுக்கும் சராசரியாக குழாய் தண்ணீர் கிடைக்கப்பெறுகிறது.

ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 55 லிட்டர் வழங்க வேண்டும் என்ற திட்டத்தில் அனைவருக்கும் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் 114 குழாய் இணைப்புகள் இருந்தன. அவர்களுக்கும் புதிதாக குழாய் இணைப்பு இந்த திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. பழையகுடிநீர் குழாய் இணைப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. தண்ணீருக்காக பொதுமக்களிடமிருந்து இன்னும் வரிவசூல் செய்யப்படவில்லை.

பாரத பிரதமர் மோடி, தமிழ்நாட்டிலேயே எங்கள் ஊராட்சியை தேர்வு செய்து எங்கள் மக்களுக்காக பேச வாய்ப்பளித்தார். அதற்காக அவருக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.