அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது வென்ற வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி சூட்டினார்

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டும் நிகழ்ச்சியும், அந்தமானில் அமைய உள்ள நேதாஜி நினைவு மண்டபத்தின் மாதிரி வடிவத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ராணுவத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருது, ‘பரம்வீர் சக்ரா’ ஆகும். போர்க்காலங்களில் மிகவும் துணிச்சலுடன் செயல்படும் முப்படையினரின் வீரத்தை பாராட்டி இவ்விருது வழங்கப்படுகிறது.

கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி இந்த விருது தோற்றுவிக்கப்பட்டது. முதலாவதாக, ராணுவ மேஜர் சோம்நாத் சர்மா, ‘பரம்வீர் சக்ரா’ விருதை பெற்றார். இதுவரை 21 பேர் இந்த விருதை பெற்றுள்ளனர். அவர்களில் 14 பேருக்கு மரணத்துக்கு பிந்தைய விருதாக வழங்கப்பட்டது. விருது பெற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு மாநில அரசுகளும், மத்திய அமைச்சகங்களும் உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. கடந்த 1999-ம் ஆண்டுக்கு பிறகு ‘பரம்வீர் சக்ரா’ விருது வழங்கப்படவில்லை. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்ற 21 பேரின் பெயர்களை அந்தமானில் உள்ள 21 தீவுகளுக்கு பிரதமர் மோடி சூட்டினார். நேற்று காணொலி காட்சி மூலம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பெயர் சூட்டினார்.

அவர்களில், முதலாவதாக விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மா மற்றும் மேஜர் தன்சிங் தாபா உள்ளிட்டோரின் பெயர்களும் அடங்கும். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போரில் இறந்த ‘மேஜர் ராமசாமி பரமேஸ்வரன் பெயரும் ஒரு தீவுக்கு’ சூட்டப்பட்டது. அந்தமானில் உள்ள ரோஸ் தீவில் (2018-ம் ஆண்டு நேதாஜி பெயர் சூட்டப்பட்டது) நேதாஜி நினைவு மண்டபம் கட்டப்படுகிறது. அதில், அருங்காட்சியகம், ரோப்கார் வசதி, ஒலி-ஒளி காட்சி, குழந்தைகள் கேளிக்கை பூங்கா உள்ளிட்ட வசதிகள் இடம் பெறுகின்றன. இந்த நினைவு மண்டபத்தின் மாதிரி வடிவத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்த மண், முதல் முறையாக 1943-ம் ஆண்டு நேதாஜி தேசிய கொடி ஏற்றிய மண். அத்தகைய அந்தமான் மக்களிடையே பேசுவது பெருமையாக இருக்கிறது. அந்தமான் தீவுகளுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டி இருப்பது, இனிவரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். தேசபக்தி உணர்வை ஊட்டும்.

சுதந்திர போராட்டத்தில் நேதாஜியின் பங்களிப்பை மறைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், டெல்லி, வங்காளத்தில் இருந்து அந்தமான் வரை ஒட்டுமொத்த நாடும் நேதாஜிக்கு மரியாதை செலுத்துகிறது. நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிடுமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. ஆனால், எனது அரசுதான், இறுதியாக அந்த கோப்புகளை வெளியிட்டது.

காலனி ஆட்சியை கடுமையாக எதிர்த்ததற்காக நேதாஜி என்றென்றும் நினைவு கூரப்படுவார். அவரது சிந்தனைகள் எனக்கு ஊக்கமளிக்கும். நேதாஜி நினைவு மண்டபமும் மக்களின் உள்ளங்களில் தேசபக்தியை உண்டாக்கும். 21 தீவுகளுக்கு பெயர் சூட்டிய நிகழ்வை ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ நிகழ்வாக ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்.

இந்த தீவுகள், அடிமை சின்னத்தின் அடையாளங்களாக முன்பு பார்க்கப்பட்டன. அதனால்தான் பெயரை மாற்ற முடிவு செய்தோம். கடந்த 8 ஆண்டுகளாக, அந்தமானில் சுற்றுலாவை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை அடையாளம் கண்டு வருகிறோம்.

உலகம் முழுவதும் எல்லா மக்களும் ‘கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்’ என்று கருதும் அளவுக்கு இதை உருவாக்க கடுமையாக உழைத்து வருகிறோம். அந்தமானில், சிறப்பான இணைய வசதியை உருவாக்க கண்ணாடி இழைகள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வருங்காலத்தில் இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அழகான கடற்கரைகளுக்காக மட்டுமின்றி, சுதந்திர போராட்ட வரலாற்றை தெரிந்து கொள்ளவும் தற்போது அந்தமானுக்கு மக்கள் செல்ல தொடங்கி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். இதற்கிடையே, 21 தீவுகளுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருது பெற்றவர்கள் பெயர்களை சூட்டியதற்காக பிரதமர் மோடிக்கு இந்தி நடிகர்கள் அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.