அதிமுக பொதுக்குழு வழக்கு – ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தனித்தனியாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதே நாளில் அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் இருந்தே நீக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சார்பில் ஐகோர்ட்டில் அளிக்கப்பட்டிருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஓ.பி.எஸ். சார்பில் பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு ஓ.பி.எஸ். மீண்டும் ஐகோர்ட்டை அணுக அறிவுறுத்தியதுடன் பொதுக்குழு வழக்கை 2 வாரத்தில் முடிக்கவும் உத்தரவிட்டது. அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையிலேயே நடைபெற்று வந்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையிலேயே வழக்கு விசாரணை பட்டியலிடப்பட்டது. ஆனால் ஓ.பி.எஸ். தரப்பில் வழக்கு விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பின்னர் வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரை செய்தார். இதன்படி புதிய நீதிபதியாக ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று ஐகோர்ட்டில் மீண்டும் தொடங்கியது. அப்போது மூத்த வழக்கறிஞர் வர இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று 10-ந்தேதி (நாளை மறுநாள்) வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். இந்த விசாரணையை 2 வாரத்தில் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதால் இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி ஜெயச்சந்திரன் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பை வழங்க உள்ளார். இதனால் அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான விசாரணை முடிந்து நீதிபதி அளிக்க போகும் தீர்ப்பு என்ன? என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.