அதிகமானோர் தற்கொலை செய்துக்கொண்ட மாநிலங்கள்! – தமிழகத்துக்கு 2ம் இடம்

கடந்த ஆண்டின் தற்கொலை நிகழ்வுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய குற்ற ஆவண பிரிவு வருடாந்திர அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஆண்டு நாடு முழுவதும் 1 லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 418 தற்கொலைகள் நடந்துள்ளன.

கடந்த 2019-ம் ஆண்டு 1 லட்சத்து 39 ஆயிரத்து 123 பேர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது அதிகம் ஆகும்.

அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 19 ஆயிரத்து 909 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 16 ஆயிரத்து 883 தற்கொலைகளுடன் தமிழ்நாடு 2-ம் இடத்தில் இருக்கிறது. மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேற்கண்ட 5 மாநிலங்களிலும் சேர்த்து, மொத்த தற்கொலையில் 50.1 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன.

நாட்டின் மக்கள்தொகையில் 16.9 சதவீத மக்களை கொண்டுள்ள உத்தரபிரதேசம், தற்கொலையில் 3.1 சதவீதம் என்ற குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கிறது. மொத்த தற்கொலையில் தமிழ்நாட்டின் பங்கு 11 சதவீதம் ஆகும்.

யூனியன் பிரதேசங்களில் டெல்லியில் 3 ஆயிரத்து 142 பேரும், அதற்கு அடுத்தபடியாக புதுச்சேரியில் 408 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 70.9 சதவீதம் பேர் ஆண்கள், 29.1 சதவீதம் பேர் பெண்கள். குடும்ப பிரச்சினைகளால் 33.6 சதவீத தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. திருமணம் தொடர்பான பிரச்சினைகள், நோய், ஆகியவையும் முக்கிய காரணங்களாக உள்ளன.