அடுத்த 25 ஆண்டுகளுக்கு உலகின் பாரம்பரிய மருத்துவ சகாப்தத்தின் தொடக்கம் – பிரதமர் மோடி பேச்சு

குஜராத்தின் ஜாம் நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது:

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அவர்களுக்கு இந்தியர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசி நம் அனைவரின் இதயங்களையும் தொட்டார். டெட்ரோஸை எனக்கு நீண்ட காலமாக தெரியும். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், தனது இந்திய ஆசிரியர்களிடமிருந்து தான் கற்றுக்கொண்டதை பெருமையுடன் குறிப்பிடுவார்.

இந்தியா மீதான அவரது அன்பு தான் தற்போது ஒரு கல்வி நிறுவனம் தொடங்க செய்திருக்கிறது. அவரது எதிர்பார்ப்பு, நம்பிக்கைகளுக்கு நாங்கள் துணை நிற்போம் என்று அவருக்கு உறுதி அளிக்கிறேன். மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மருத்துவ மையத்தின் மூலம், மனிதகுலம் அனைவருக்கும் சேவை செய்வதற்கான ஒரு பெரிய பொறுப்பை இந்தியா எடுத்துக்கொள்கிறது.

பாரம்பரிய மருந்துகள் மூலம் சிறந்த மருத்துவ தீர்வுகளை உலகிற்கு வழங்க இந்த மையம் உதவும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு உலகின் பாரம்பரிய மருத்துவ சகாப்தத்தின் தொடக்கம் இது.

மன அழுத்தத்தைக் குறைக்கவும், சமநிலையை பராமரிக்கவும் உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு யோகா பெரிதும் உதவுகிறது. யோகாவின் நோக்கத்தை விரிவுபடுத்த, இந்த புதிய மையம் முக்கிய பங்கு வகிக்கும்.

நம் முன்னோர்கள் எந்த நோய்க்கும் பாதி சிகிச்சை சமச்சீரான உணவில் இருப்பதாக நம்பினர். பாரம்பரிய மருத்துவம் பற்றிய அறிவு முக்கியமானது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் தலைமுறைக்கு இது உதவிகரமாக இருக்கும் என தெரிவித்தார்.