அஜித்திடம் பாடம் கற்றுக் கொண்ட பிருத்விராஜ்!

தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களில் நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ளார். மோகன்லால் நடித்த லூசிபர் படம் மூலம் டைரக்டராக அறிமுகமானார். லால் ஜூனியர் இயக்கத்தில் பிருத்விராஜ் நடித்துள்ள டிரைவிங் லைசன்ஸ் மலையாள படம் திரைக்கு வந்துள்ளது.

இதையொட்டி தனது ரசிகர்களுடன் பிருத்விராஜ் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அஜித்குமார் பற்றி கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த பிருத்விராஜ் கூறியதாவது:- “அஜித்குமார் என்னை விட பெரிய நடிகர். எனது வாழ்க்கையில் முக்கியமான பாடத்தை அவரிடம் இருந்தே படித்தேன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யா புதிய வீட்டுக்கு குடித்தனம் சென்றார். கிரகப்பிரவேசத்துக்கு என்னையும் அழைத்து இருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு அஜித், கார்த்தி, மாதவன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

அங்கு அஜித்தும் நானும் நீண்ட நேரம் பேசினோம். அந்த உரையாடலில் இருந்து அஜித்குமார் வெற்றி தோல்வியில் இருந்து விலகி இருப்பவர் என்று தெரிந்துக் கொண்டேன். அவரது படம் பெரிய வெற்றி பெற்றாலும் சந்தோஷம் இருக்காது. தோல்வி அடைந்தாலும் வருத்தப்படமாட்டார். இதைத்தான் எனது வாழ்க்கையில் நான் பின்பற்றுகிறேன். நாம் வெற்றியில் தலை கால் புரியாமல் ஆடுவோம் தோல்வியில் சங்கடப்படுவோம். இரண்டிலும் சிக்காமல் விலகி இருப்பதை அஜித்திடம் இருந்து கற்றுக் கொண்டேன்.’‘

இவ்வாறு பிருத்விராஜ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *