ஹம்டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனம் ரூஹ் அஃப்சா என்ற சத்துபானத்தை தயாரித்து விற்று வருகிறது. இந்நிலையில் பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான பாபா ராம் தேவ் தங்கள் நிறுவன பானத்தை விளம்பரப்படுத்த வேண்டி சமீபத்தில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பேசிய அவர், அஃப்சா பானம் விற்பனை மூலம் வரும் லாபத்தை மசூதியும் மதரசா கட்டவே பயன்படுத்துவார்கள் என பேசிய ராம்தேவ், இது லவ் ஜிகாத் போல சர்பத் ஜிகாத் என்று கூறினார். இந்நிலையில் ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்தை எதிர்த்து ஹம்டாட் லேப் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அமித் பன்சால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹம்தர்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, இந்த விவகாரம் அவமானகரமானது. இது ஒரு வெறுக்கத்தக்க பேச்சு. இது வகுப்புவாத பிளவை உருவாக்குகிறது என்று தெரிவித்தார். அப்போது பேசிய நீதிபதி, “இந்த விவகாரம் நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இது நியாயமல்ல” என்று பாபா ராமதேவ் வழக்கறிஞரை நோக்கி காட்டமாக தெரிவித்தார். இதன்பின் பேசிய ராம்தேவின் வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் தொடர்பான அனைத்து அச்சு அல்லது வீடியோ வடிவ விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை உடனடியாக நீக்குவதாக தெரிவித்தார். இந்நிலையில், ரூஹ் அஃப்சா என்ற சத்துபானம் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பாபா ராம்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணையில், “உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த போதிலும், அவர் (பாபா ராம்தேவ்) யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. அவர் தனி உலகில் வாழ்கிறார்” என்று நீதிபதி காட்டமாக தெரிவித்தார்.
Read More