Tamilசெய்திகள்

ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு – அமெரிக்கா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் மோடி, மாநாட்டுக்கு இடையே உலக நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். அந்த வகையில் ரஷிய அதிபர் புதினை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு விவகாரங்கள் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசினர்.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த பிறகு புதினும் மோடியும் நேருக்கு நேர் முதல் முறையாக சந்தித்தனர். அந்த சந்திப்பின்போது, இது போருக்கான காலம் அல்ல என உக்ரைன் போர் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். ஐ.நா. பொதுச்சபையின் 77-வது கூட்டத்தில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் பேசுகையில், ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை வரவேற்றார்.

இந்நிலையில், ரஷிய அதிபருடனான பிரதமர் மோடியின் பேச்சை அமெரிக்கா வரவேற்றுள்ளது. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன், நீண்ட காலமாக ரஷியாவுடன் உறவு பாராட்டி வரும் இந்தியாவின் பிரதமர், போரை முடிவுக்கு கொண்டு வருமாறு புதினிடம் வலியுறுத்தியது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார்.