இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி – இன்று மொகாலியில் தொடங்குகிறது
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்றிரவு அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடங்க உள்ள நிலையில் தங்களை சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள இந்த தொடர் உதவிகரமாக இருக்கும்.
மீண்டும் பார்முக்கு திரும்பிய விராட் கோலியின் பேட்டிங் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் நல்ல தொடக்கம் தர வேண்டியது அவசியமாகும். மிடில் வரிசையை சரிசெய்வதில் இந்த முறை கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம்.
காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷல் பட்டேல் அணிக்கு திரும்பியிருப்பது பந்து வீச்சை வலுப்படுத்தும். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தாக்கத்தை ஏற்படுத்தினால் அது அணிக்கு உற்சாகம் தரும்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணி வலுவாகவே தென்படுகிறது. ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல் அதிரடியில் மிரட்டுவார்கள். ஆல் ரவுண்டர் டிம் டேவிட் அறிமுக வீரராக விளையாட இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. பந்துவீச்சில் ஹேசில்வுட், கம்மின்ஸ், ஆடம் ஜாம்பா, சீன் அபோட் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
மொத்தத்தில் இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. போட்டி நடக்கும் மொகாலி மைதானத்தில் இதுவரை ஐந்து டி20 ஆட்டங்கள் நடந்துள்ளன. இவற்றில் இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. இதில் 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை சூப்பர்10 சுற்றில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் அடங்கும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்ட்யா, அஷ்வின் அல்லது யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), ஜோஷ் இங்லிஷ், ஸ்டீவன் சுமித், டிம் டேவிட், கேமரூன் கிரீன், மேத்யூ வேட், மேக்ஸ்வெல், கம்மின்ஸ், ஹேசில்வுட், ஆடம் ஜம்பா, சீன் அப்போட் அல்லது ஆஷ்டன் அகர்.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.