Tamilவிளையாட்டு

ஷகீன்ஷா அப்ரிடியின் சிகிச்சைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உதவி செய்யவில்லை – ஷாகித் அப்ரிடி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்ஷா அப்ரிடி, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஷகீன்ஷா அப்ரிடி தனது காயத்துக்கு சிகிச்சை பெறுவதற்காக லண்டன் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று அவர் தற்போது குணம் அடைந்துள்ளார்.

இதையடுத்து அடுத்த மாதம் நடக்கும் டி20 ஓவர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் ஷகீன்ஷா அப்ரிடி இடம் பெற்றார். இந்த நிலையில், ஷகீன்ஷா அப்ரிடி சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி குற்றம் சாட்டி உள்ளார்.

ஷகீன்ஷா அப்ரிடி தனது சிகிச்சைக்காக தனது சொந்த பணத்தில் விமான டிக்கெட் வாங்கி இங்கிலாந்து சென்றார். லண்டனில் ஓட்டலில் தங்குவதற்கு சொந்த பணத்தை செலவழித்தார். நான் அவருக்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.பின்னர் அவர் அந்த டாக்டரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை. ஷகீன்ஷா அப்ரிடி தனது சொந்த செலவில் அனைத்தையும் செய்து கொண்டார். டாக்டர்கள், ஓட்டல் மற்றும் உணவு என அனைத்தையும் அவர் தனது சொந்த பணத்தில் இருந்து செலுத்தினார். எனக்கு தெரிந்தவரை ஷகீன்ஷா அப்ரிடியுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சர்வதேச சுற்றுப் பயணங்களுக்கான இயக்குனர் ஜாகீர்கான் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பேசினார்.

இவ்வாறு ஷாகித் அப்ரிடி கூறினார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ள இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே டி20 உலக கோப்பை போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் அணி குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறும் போது, தலைமை தேர்வாளரின் மலிவான தேர்வு என்று பதிவிட்டுள்ளார்.