ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை விண்ணுக்கு இன்று அமெரிக்கா அனுப்புகிறது
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, ஆர்டெமிஸ் 1 திட்டத்தை செயல்படுத்த இந்த திட்டத்தின் முதல்படியாக நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 29-ம் தேதி மாலையில் ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை அமெரிக்கா இன்று விண்ணில் ஏவுகிறது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்றிரவு 11.47 மணிக்கு ராக்கெட் அனுப்பப்படுகிறது.
ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து ஓரியன் விண்கலத்துடன் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று ஏவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.