மின் கட்டண பாக்கி ரூ.6,756 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் – தெலுங்கான முதல்வருக்கு ஆந்திர மாநில முதல்வர் கடிதம்
ஆந்திர மாநில அரசு அனுமின் நிலையம், காற்றாலை உள்ளிட்டவைகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநில அரசு ரூ.3,441 கோடியை மின் கட்டண பாக்கியாக வைத்துள்ளது.
மின் பாக்கியாக வைத்துள்ள பணத்திற்கு ரூ.3,315 கோடி வட்டி செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. ஆந்திர மாநில அரசுக்கு தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதாகவும், அதனால் அரசு நல திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்க முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே தெலுங்கானா அரசு வட்டியுடன் சேர்த்து ரூ.6,756 கோடியை உடனடியாக ஆந்திர மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவிற்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதேபோல் ஆந்திராவில் இருந்து தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் சென்னையின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தெலுங்கு கங்கை திட்ட கால்வாய் பராமரிப்பு பணிகளை ஆந்திர மாநில அரசு ஊழியர்கள் செய்து வருகின்றனர். தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின் போது பராமரிப்பு பணிக்கான செலவுகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே பராமரிப்பு பணிக்கான செலவிற்கான ரூ.3 கோடி பாக்கியை வழங்க வேண்டும் என ஆந்திர மாநில அரசு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
கோரிக்கையை ஏற்று தமிழக அரசு, ஆந்திர மாநில அரசுக்கு ரூ.3 கோடியை உடனடியாக வழங்கி உள்ளது. இதேபோல் தெலுங்கானா அரசும் உடனடியாக மின்சார நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென கூறியுள்ளனர்.