Tamilவிளையாட்டு

புரோ கபடி லீக் – தொடரும் தமிழ் தலைவாஸின் தோல்வி

6-வது புரோ கபடி லீக் திருவிழா பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரண்டு பிரிவாக லீக்கில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 22 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும். இதுவரை யு மும்பா, குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் நேற்றிரவு நடந்த 99-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, தபாங் டெல்லியுடன் கோதாவில் இறங்கியது. விறுவிறுப்பான இந்த மோதலில் முதல் பாதியில் 16-11 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்ற டெல்லி அணி அதை கடைசி வரை போராடி தக்க வைத்துக் கொண்டது. முடிவில் டெல்லி அணி 37-33 என்ற புள்ளி கணக்கில் தலைவாசை சாய்த்து 10-வது வெற்றியை பதிவு செய்தது. அதிகபட்சமாக தலைவாஸ் கேப்டன் அஜய் தாக்கூர் 14 புள்ளிகள் எடுத்தார். 17-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாசுக்கு இது 10-வது தோல்வியாகும். தொடர்ச்சியான சறுக்கலால் தலைவாஸ் அணிக்கு அடுத்த சுற்று வாய்ப்பு சிக்கலாகியுள்ளது.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 30-29 என்ற புள்ளி கணக்கில் அரியானா ஸ்டீலர்சை வீழ்த்தி திரில் வெற்றியை பெற்றது. அரியானா அணியில் மோனு கோயட் ரைடு மூலம் 11 புள்ளிகள் சேர்த்த போதிலும் பலன் இல்லாமல் போய் விட்டது. 17-வது ஆட்டத்தில் ஆடிய உ.பி.யோத்தா அணிக்கு இது 4-வது வெற்றியாகும்.

இன்றைய ஆட்டங்களில் தெலுங்கு டைட்டன்ஸ்-குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் (இரவு 8 மணி), பாட்னா பைரட்ஸ்-புனேரி பால்டன் (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *