ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்து 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டர்.
முதல் கட்டமாக விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதமாக நிர்ணயிக்கப்பட்டது. விசாரணையை தொடங்கிய ஆணையம், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் அவருடன் உடன் இருந்தவர்கள், உறவினர்கள், அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ நிர்வாகம், டாக்டர்கள் உள்ளிட்ட பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வந்தது.
குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாததால் 2017 டிசம்பர் 24-ந் தேதியில் இருந்து 6 மாதங்களுக்கு ஆணையத்தின் கால அவகாசத்தை தமிழக அரசு முதன் முதலாக நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு கொண்டே வந்தது. விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த சமயத்தில் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடையும் விதித்தது.
அதன்பிறகு மருத்துவ குழுவை அமைத்து விசாரணையை நடத்த எய்ம்ஸ் இயக்குனரகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ 8 உறுப்பினர்களை கொண்ட மருத்துவ குழுவை எய்ம்ஸ் நியமித்தது. இதன் பிறகு தான் மீண்டும் விசாரணை துரிதமாக நடைபெற்றது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவ குழு 3 பக்க அறிக்கையை அளித்தது. அதில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித தவறுகளும் இல்லை. உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்திருந்தது. ஒருவழியாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை முடிவடைந்து விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வந்தது.
தற்போது இந்த பணியும் முடிவடைந்துள்ளது. எனவே ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையத்தின் இறுதி அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நாளை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உள்ள தகவல்கள் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடும்.