Tamilசெய்திகள்

ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் – இன்று வாக்குப் பதிவு தொடங்கியது

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 200 இடங்களை கொண்ட சட்டசபையில், ஒரே ஒரு இடத்தை தவிர 199 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. ராம்கார் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்து விட்டதால் தேர்தல் ஒத்தி போடப்பட்டுள்ளது.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கை பதிவு செய்தனர். மாநில உள்துறை அமைச்சர் குலாப் சந்த் கட்டாரியா ஓட்டு போடுவதற்கு முன்னதாக உதய்பூரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தார். மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது.

ராஜஸ்தானில் தேர்தல் தோறும் ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. எனவே ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரசும் தீவிர களப்பணியாற்றி உள்ளன. பா.ஜனதாவுக்கு பிரதமர் மோடி, கட்சித்தலைவர் அமித் ஷா, காங்கிரசுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தானில் 2,274 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4 கோடியே 74 லட்சம் வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். அவர்களுக்காக 51 ஆயிரத்து 687 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 941 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் தெலுங்கானாவிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் மாநிலங்களுடன் தெலுங்கானா, ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் 11-ந் தேதி எண்ணப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *