Tamilசெய்திகள்

முல்லை பெரியாறு அணையின் ரகசியங்களை பயங்கரவாத அமைப்புக்கு கொடுத்த 3 கேரள போலீசார் கைது

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே உள்ள கரிமன்னூர் போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தவர் அனஸ். இவர் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் குறித்த ரகசிய விபரங்களை போலீஸ் நிலையத்தில் இருந்த கம்ப்யூட்டரில் திருடி பயங்கரவாத தொடர்பில் இருந்த ஒரு இயக்கத்துக்கு கொடுத்ததாக புகார் எழுந்தது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசிய விபரங்களை அனஸ் கொடுத்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வந்தனர்.

மூணாறு போலீஸ் நிலையத்தில் இருந்தும் சில முக்கிய ரகசிய விபரங்கள் பயங்கரவாத இயக்கத்துக்கு கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மூணாறு டி.எஸ்.பி. மனோஜூக்கு அப்போதைய எஸ்.பி. கருப்பசாமி உத்தரவிட்டார்.

இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போலீசாரின் பல முக்கிய ரகசிய விபரங்கள் போலீஸ் நிலைய கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை கடந்த மே மாதம் 15-ந் தேதி தங்களது செல்போனில் பதிவு செய்ததும் கண்டறியப்பட்டது. அதே போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் அலியார், ரியாஸ், அப்துல் சமது ஆகிய 3 பேரும் இந்த தகவல்களை திருடியது உறுதியானது.

இதனையடுத்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கம்ப்யூட்டரில் இருந்த ரகசிய விபரங்களை திருடி பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கியது உறுதி செய்யப்பட்டது. இதில் அலியார் என்பவர் பல மாதங்களாக முல்லைப்பெரியாறு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர். எனவே இவர் பெரியாறு அணையின் பாதுகாப்பு ரகசியங்கள் குறுத்தும் பயங்கரவாத அமைப்பினருக்கு வழங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

3 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இடுக்கி மாவட்ட எஸ்.பி.யிடம் டி.எஸ்.பி. மனோஜ் அறிக்கை தாக்கல் செய்தார். இதனையடுத்து 2 பேர் எர்ணாகுளம் மாவட்டத்துக்கும், ஒருவர் கோட்டயம் மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.