அதிமுக நிர்வாகி தொடர்புடைய அலுவலகத்தில் இரண்டாவது நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் என்ஜினீயர் சந்திரசேகர். இவர் கோவை தெற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். நேற்று சந்திரசேகர் வீட்டிற்கு 8 பேர் அடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் அவது வீட்டின் கதவை பூட்டி விட்டு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் சந்திரசேகர் இல்லை.
அவரது வீடு முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்ட அதிகாரிகள், வீட்டில் இருந்த அவரது குடும்பத்தினரிடம் வருமானம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் அவரது வீட்டில் இருந்து ஆவணங்களையும் கைப்பற்றினர்.
இதேபோல் அவரது பெற்றோர், சகோதரர், சகோதரி வீடு உள்பட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு தொடங்கிய சோதனையானது 12 மணி நேரத்திற்கு பிறகு நள்ளிரவு 12 மணிக்கு முடிந்தது. அதன்பிறகு அதிகாரிகள் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் சில ஆவணங்களுடன் கூடிய பைகளும் எடுத்து சென்றனர்.
கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி கட்டிடத்தின் 7 மற்றும் 8-வது தளத்தில் என்ஜினீயர் சந்திரசேகருக்கு தொடர்புடைய கே.சி.பி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக கார்த்திக் ஹரிஹரன் இருக்கிறார். சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த அதே நேரத்தில் இங்கும் சோதனை நடந்தது.
இங்கு 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மற்ற இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கு சோதனை முடிந்தாலும், இங்கு மட்டும் அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய அந்த அலுவலகம் முழுவதும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு ஆவணங்களை கைப்பற்றினர்.
தொடர்ந்து 2-வது நாளாக இன்று காலை முதல் மீண்டும் கே.சி.பி. நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அங்கு பணியில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
வருமான வரித்துறை சோதனை நடந்து கொண்டிருந்த அதே வேளையில், லஞ்ச ஒழிப்பு போலீசாரும் கோவையில் மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் கோவை மாநகராட்சியை சேர்ந்த பொறியாளர் உள்பட 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மற்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.