‘ராக்கெட்ரி’ படத்தை பாராட்டிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்த நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
இப்படம் குறித்து நேற்று நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் – குறிப்பாக இளைஞர்கள்.
நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுப்பட்ட பத்ம பூஷன் திரு.நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குனராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன்.
இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும் என்று ரஜினி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கு வகையில் மாதவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்ன சொல்றது, எப்படி சொல்றதுன்னு தெரியல. இந்த பாராட்டு நம்பி நாராயணன் மற்றும் கடைசி வரைக்கும் போராடிய நம் படக்குழுவுக்கு தான் சேரும். ரஜினி சார் ரொம்ப நன்றி” என்று உருக்கமாக வீடியோ பகிர்ந்துள்ளார்.