Tamilசெய்திகள்

ஜூலை 3 ஆம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் சசிகலா

அ.தி.மு.க.வில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தீவிரப்படுத்தி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து திருத்தணி சென்ற அவர் ஆதரவாளர்கள், தொண்டர்களை சந்தித்தார்.

அப்போது பேட்டி அளித்த அவர் அ.தி.மு.க.வுக்கு தான் தலைமை தாங்க வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறர்கள் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் சசிகலாவின் அடுத்த கட்ட சுற்றுப் பயண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக அ.தி. மு.க. பொதுச்செயலாளரின் முகாம் அலுவலகம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகம் தலை நிமிரவும், தி.மு.க. தலைமையிலான அரசின் அராஜக செயல்களை தடுத்து நிறுத்திடவும், பெண்ணினத்தின் பாதுகாப்பை உறுதி செய்திட வலியுறுத்தியும் சசிகலா, பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்.

வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதியம் 2 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கிண்டி, கத்திப்பாரா மேம்பாலம், போரூர் வழியாக பூந்தமல்லி சென்றடைகிறார். அப்போது அவர் தொண்டர்களை சந்திக்கிறார்.

பின்னர் குமணன்சாவடியிலிருந்து தனது பயணத்தை தொடங்கும் சசிகலா திருமழிசை, வெள்ளவேடு, பாக்கம் மற்றும் தாமரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறார்.

இதன் பிறகு வருகிற 5-ந் தேதி மதியம் 12.30 மணிக்கு, தியாகராயநகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு தனது சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். சசிகலா 5-ந் தேதி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலும், 7-ந்தேதி வானூரிலும், 8-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலும் சுற்றுப் பயணம் செய்கிறார்.

சசிகலா மேற்கொள்ளும் இந்த சுற்றுப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், ஜெயலலிதாவின் வீரத்தையும், விவேகத்தையும் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டிருக்கும் அனைத்து தாய்மார்கள், எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களான இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.