Tamilசெய்திகள்

ஐபிஎல் ஏலம் போல் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை ஏலம் எடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி – டிடிவி தினகரன் தாக்கு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் அயபாக்கத்தில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் மத்தியில் பேசினார்.

பின்னர் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் பொதுக்குழு கூட்டங்கள் ஒரு சிறப்பு வாய்ந்த சரித்திர நிகழ்வாக இருக்கும். அ.தி.மு.க. அழிந்து கொண்டிருக்கிறது என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். கருணாநிதியை எதிர்த்து தான் எம்.ஜி.ஆர். அரசியல் களம் கண்டார். அதே போல அவரை பின் தொடர்ந்து அம்மாவும் அரசியல் களம் வந்தார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பேசி வருகிறார்.

அ.ம.மு.க. என்ற ஒரு கட்சி இருக்கிறது என்றும் இதில் அம்மாவின் உண்மையான தொண்டர்கள் இருக்கிறார்கள் என்பதை மறந்து அவர் பேசி வருகிறார். அ.தி.மு.க. அயோக்கியர்களின் கூடாரம் ஆகி விட்டது. ஆகவே, வருங்காலத்தில் அம்மாவின் கொள்கைகளை முன்னிறுத்தி அம்மாவின் ஆட்சியை அமைப்போம். அதன் பின்னர் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்.

அ.தி.மு.க. தவறானவர்களின் கைகளில் மாட்டிக்கொண்ட காரணத்தினால் தான் நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை தொடங்கினோம். தற்போது இரட்டை இலை சின்னம் எம்.ஆர் ராதா கையிலும் வீரப்பா போன்ற வில்லன்களின் கையிலும் மாட்டி உள்ளது. அதனை அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் தான் மீட்டு எடுப்பார்கள்.

ஓ.பன்னீர் செல்வத்தை ரகசியமாக சந்திக்க எனக்கு எந்தவித தேவையும் இல்லை. பல கோடி ரூபாய் செலவு செய்து பொதுக்குழுவை கூட்டியும், நீதிமன்றம் தலையிட்டதால் எடப்பாடி பழனிசாமி நினைத்தது எதுவும் நடக்கவில்லை. இதனால் அவர்கள் ஏதேதோ பேசி வருகின்றனர்.

தற்போது அ.தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினர்களை 3 கோடி, 4 கோடி, 5 கோடி என பணம் கொடுத்து வாங்கி பொதுச்செயலாளர் பதவிக்கு வரும் வேலை நடந்து வருகிறது. அதற்காக எடப்பாடி பழனிசாமி அசுர ஆட்டம் ஆடி வருகிறார். அதனால், அ.தி.மு.க. இயக்கம் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் நல்லவேளை தண்ணீர் பாட்டிலால் மட்டும்தான் தாக்கப்பட்டார். அந்த கூட்டத்தில் இருப்பவர்கள் இதை விட ஆபத்தானவர்கள். ஆனால் மிக தைரியமாக அங்கு சென்று அந்த பொதுக்குழுவில் கலந்து கொண்ட ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகரன் ஆகியோருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐ.பி.எல் ஏலம் போல கட்சி நிர்வாகிகளை பல கோடி கொடுத்து வாங்கினாலும் எடப்பாடி பழனிசாமி நினைத்தது நடக்காமல் போய்விட்டது. ஒற்றை தலைமை பிரச்சினை காரணமாக தி.மு.க. ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தற்போது யாரும் பேசுவதே இல்லை அதனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளை தற்போது காற்றில் பறக்க விட்டிருக்கிறார்.

பொதுக்குழுவில் கைமாறிய பணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் முறையாக கைப்பற்றி இருந்தால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சார்பில் டி.டி.வி.தினகரனுக்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு 5 அடி வெள்ளிவேல், வீரவாள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன், அமைப்பு செயலாளர் தட்சிணா மூர்த்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் குட்வில் குமார், பொறி யாளர் அணி மாநில செயலாளர் கரிகாலன், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.வேதாசலம், மேற்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் லக்கி முருகன், கிழக்கு மாவட்ட செயலாளர் சங்கர் ராஜா மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி, வட்ட, கிளைக்கழக நிர்வாகிகள் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.