ரஞ்சி கோப்பை இறுதி போட்டியில் மத்திய பிரதேசம், மும்பை அணிகள் இன்று மோதல்
38 அணிகள் பங்கேற்ற 87-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் மும்பையும், மத்தியபிரதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் (5 நாள்) பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
பிரித்வி ஷா தலைமையிலான மும்பை அணி கால்இறுதியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் உத்தரகாண்டை ஊதித்தள்ளியது. உத்தரபிரதேசத்துக்கு எதிரான அரைஇறுதியிலும் ரன்மழை பொழிந்த மும்பை அணி மொத்தம் 746 ரன்கள் முன்னிலையோடு ‘டிரா’ கண்டு இறுதிசுற்றுக்குள் நுழைந்தது. 42-வது முறையாக பட்டம் வெல்ல குறி வைத்துள்ள மும்பை அணி ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது.
மத்தியபிரதேச அணி இதுவரை ரஞ்சி கோப்பையை வென்றதில்லை. 1998-99-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை வந்து தோற்று இருக்கிறது. முதல்முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் அந்த அணியினர் தங்களை தயார்படுத்தியுள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக மத்தியபிரதேச அணிக்கு மும்பையைச் சேர்ந்த சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியாளராக இருப்பது கூடுதல் பலமாகும். இவர் ஏற்கனவே மும்பை ரஞ்சி அணிக்கு பயிற்சியாளராக இருந்து கோப்பையும் பெற்றுத் தந்துள்ளார்.
மேலும், தற்போது மும்பை அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றும் அமோல் முஜூம்தார், சந்திரகாந்த் பண்டிட் பயிற்சியின் கீழ் விளையாடி இருக்கிறார். இருவரும் நண்பர்கள் ஆவர். ஆக நன்கு பரிட்சயமான இவ்விரு பயிற்சியாளர்களில் யாருடைய யுக்தி எடுபடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.