Tamilவிளையாட்டு

கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு கொரோனா பாதிப்பு

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி டிரா ஆனது. 2-வது மற்றும் 4-வது டெஸ்டில் இந்தியா வெற்றி ( 151 ரன், 157 ரன்) பெற்றது. 3-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றியை (இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்) பெற்றது. கொரோனா பாதிப்பு காரணமாக 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தள்ளி வைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட இந்த டெஸ்ட் போட்டி வருகிற 1-ந் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்குகிறது.

இந்த டெஸ்டில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் கடந்த 16- ந் தேதி இங்கிலாந்து புறப்பட்டு சென்றனர். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் , பந்து வீச்சு பயிற்சியாளர் மாம்ரே ஆகியோர் மேற்பார்வையில் இந்திய வீரர்கள் லீசெஸ்டரில் ஏற்கனவே பயிற்சியை தொடங்கி விட்டனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடர் முடிந்தபிறகு ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் இன்று லீசெஸ்டர் சென்று அடைவார்கள். இந்த நிலையில் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.  அஸ்வின் இந்திய அணியோடு இங்கிலாந்து செல்லவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் அவர் வீரர்களுடன் செல்லவில்லை.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அஸ்வின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவர் ஏற்கனவே ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்தார். அஸ்வின் முழு குணமடைந்து அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளுடன் இருந்தால் மட்டுமே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஆட முடியும். டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு அவர் குணமடைந்து விளையாடுவார் என்ற நம்பிக்கை இருப்பதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டிக்கு முன்பு பயிற்சி ஆட்டம் நடக்கிறது. 35 வயதான அஸ்வின் 86 டெஸ்டில் விளையாடி 442 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 30 தடவை 5 விக்கெட்டுக்கு மேலும், 23 முறை 4 விக்கெட்டுக்கு மேலும் கைப்பற்றி உள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது ஒரு இன்னிங்சின் சிறந்த பந்து வீச்சாகும். 140 ரன் கொடுத்து 13 விக்கெட் வீழ்த்தியது ஒரு டெஸ்டின் சிறந்த பந்து வீச்சு ஆகும்.