Tamilசெய்திகள்

முல்லை பெறியாறு அணையில் தமிழக பொறியாளர்கள் ஆய்வு

தமிழக-கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. இருபோக நெல்சாகுபடிக்கு ஆதாரமாக உள்ளது.

இந்த ஆண்டு போதிய அளவு நீர்மட்டம் இருந்ததால் வழக்கம் போல் ஜூன் 1ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை குறைந்துள்ளதால் அணையின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது.

இந்த நிலையில் அணையில் தமிழக நீர்பாசனத்துறை தலைமை பொறியாளர் ஞானசேகர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதி, நீர் கசிவு கேலரி உள்ளிட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப கசிவு நீர் அளவு சரியாக உள்ளதா? என்பதையும் கண்காணித்தனர்.

அப்போது கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், ரேவதி, நவீன்குமார், பரதன், பிரவீன்குமார் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பருவமழை தாமதமாகி வரும் நிலையில் தமிழக அதிகாரிகள் அணையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நேற்று தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.60 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 525 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 56.84 அடி. வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 869 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடி. 73 கனஅடி நீர் வருகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 81.67 அடியாக உள்ளது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 6.2. தேக்கடி 3.4, கூடலூர் 9.6, ஆண்டிபட்டி 31, அரண்மனைபுதூர் 6.6, போடி 20.6, மஞ்சளாறு அணை 4, சோத்துப்பாறை 3, வீரபாண்டி 14, உத்தமபாளையம் 4.3, வைகை அணை 4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.