Tamilசெய்திகள்

முதலீட்டாளர்களை கவருவதற்காகவே முதலமைச்சர் துபாய் சென்றுள்ளார் – அமைச்சர் நேரு பேச்சு

 

திருச்சி தில்லை நகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி சுதந்திரத் திருநாள் அமுதப்பெருவிழாவில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்ட சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் புகைப்பட கண்காட்சியை தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி மற்றும் மாவட்ட கலெக்டர் சிவராசு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.2 கோடி 70 லட்சம் மதிப்பில் பல நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

பின்னர் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆண்டவனுக்கு தெரிந்து தான் திருச்சிக்கு கையெழுத்திட வந்துள்ளார். முதலீட்டாளர்களை கவர்ந்து, தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக, சிறந்த மாநிலமாக மாற்ற தமிழக முதல்வர் துபாய் சென்றுள்ளார்.

அண்ணாமலை, ஜெயக்குமார் போன்றவர்கள் இந்த அரசின் மீது குற்றச்சாட்டுகளை சொல்வதில் போட்டி போடுகிறார்கள். அண்ணாமலை எங்கள் மீது குற்றச்சாட்டு கூறவில்லை என்றால் அவரால் கட்சி நடத்த முடியாது. அவர்கள் பேசிக்கொண்டே போகட்டும். மக்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள். மக்கள் தி.மு.க. பக்கமும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்கமும் இருக்கிறார்கள்.

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட இறுதி வடிவம் பெற்றுள்ளது. ஒரு வார காலத்திற்குள்ளாகவே டெண்டர் பணிக்கு வந்து விடும். இந்தத் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு ரூ.2.80 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கும் பணிக்கு ரூ.438 கோடி பொதுப்பணித்துறைக்கு வந்து இருக்கிறது. காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக ஜங்‌ஷன் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர் மட்ட பாலம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தற்போது 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டப்பணிகள் எல்லாம் இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும். திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்த கூடிய காரணத்தினால் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

திருச்சி மாவட்டத்தை ஒரு முன்மாதிரி மாவட்டமாக கொண்டு வருவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெறும். தனியார் நிறுவனம் வாயிலாக திருச்சியில் உள்ள குப்பைகளை அள்ளி தூய்மைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

மெட்ரோ ரெயில் திட்டம் திருச்சிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக கோவை மாநகருக்கு கொண்டு வருவதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன. படிப்படியாக திருச்சிக்கு கொண்டு வரப்படும்.

மக்கள் அதிக அளவில் வந்து செல்லும் மலைக்கோட்டை, வயலூர், ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகியவற்றை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் இருக்கும். மேலும் அது பற்றி நாங்கள் எடுத்துக் கூற உள்ளோம்.

பால் விலை, பஸ் கட்டண உயர்வு போன்றவை அந்தந்த காலகட்டத்தில் பொருளாதாரத்திற்கு ஏற்றாற் போல் உயர்வது இயல்பான வி‌ஷயம், அதை நாங்கள் திணிக்கவில்லை.

திருச்சி ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 300 பேருந்துகள் நிற்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இந்த பேருந்து நிலையம் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேசும்போது, பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்வது செங்கல்பட்டில் அதிகம் நடைபெறுவதாக தகவல் கிடைத்திருக்கிறது. தனியார் அமைப்பின் வாயிலாக அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் தொங்கிக் கொண்டு வருவதற்கு அனுமதி அளித்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறி உள்ளோம் என்றார்.