Tamilசெய்திகள்

காஷ்மீரில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் – பாராளுமன்றத்தில் பா.ஜ.க வலியுறுத்தல்

 

பாராளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது காஷ்மீரில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பிரச்சினையை பாஜக உறுப்பினர் சுனில் குமார் சிங்
எழுப்பினார்.

1984ம் ஆண்டு முதல் 1989 ஆண்டு வரை காஷ்மீரில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதல் குறித்து மத்திய அரசு விசாரணையை தொடங்க வேண்டும் என்று
கோரிக்கை விடுத்தார். இதன் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டார்.

மேலும் 1989 ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இருந்து 70 பயங்கரவாதிகள் யாருடைய உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை
விடுத்தார்.

இந்நிலையில் மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது அதை தடுத்து
நிறுத்துமாறு அப்போதைய வி.பி.சிங் அரசை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ராஜிவ்காந்தி வலியுறுத்தியதாக கூறினார்.

காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் சீக்கியர்களை தன்னால் பாதுகாக்க முடியாது என்று அப்போதைய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் ஜக்மோகன் கூறியதாகவும்
அதனால் காஷ்மீரில் இருந்து அவர்களை வெளியேறுமாறு அவர் தெரிவித்ததாகவும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டார்.