தமிழக பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது
தமிழக சட்டசபையில் கடந்த 18-ந்தேதி, 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதை தொடர்ந்து 19ம் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.
காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டம் தொடங்கியதும், முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து, பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
அதன்பின்னர், கேள்வி நேரம் நடைபெறுகிறது. தொடர்ந்து பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது.
நாளையும் (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாளும் (புதன்கிழமை) பட்ஜெட் மீதான விவாதம் தொடர்கிறது.
வருகிற 24-ந்தேதி, 2022-2023-ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானிய கோரிக்கையும், 2021-2022-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையும் அவை முன் வைக்கப்பட இருக்கிறது.
இதையடுத்து நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோ பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உரையாற்றுகின்றனர்.