சிரஞ்சீவி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் சல்மான் கான்
மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்து வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘காட்பாதர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை தமிழ் இயக்குனர் மோகன் ராஜா இயக்குகிறார். மேலும் நடிகை நயன்தாரா இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.இந்த நிலையில் காட்பாதர் திரைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் இணைந்து நடிப்பதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு தளத்திற்கு வந்த சல்மான்கானுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் சிரஞ்சீவி பகிர்ந்துள்ளார்.
மேலும் அந்த பதிவில் அவர், ‘காட்பாதர் திரைப்படத்திற்கு சல்மான்கானை வரவேற்கிறேன். உங்கள் வருகை அனைவரையும் ஆற்றல்படுத்தியுள்ளது. மேலும் உற்சாகம் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது. உங்களுடன் திரையைப் பகிர்வது மிகுந்த மகிழ்ச்சி. உங்கள் இருப்பு பார்வையாளர்களுக்கு மாயாஜால அனுபவத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று கூறியுள்ளார். சிரஞ்சீவியுடன் சல்மான்கா் இணைந்து நடிப்பதால் இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.