பள்ளி கூட நிகழ்ச்சிக்கு வரும் போது தான் பேரனையும் பேத்தியையும் பார்க்க முடிகிறது – மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை சிஷ்யா பள்ளியின் 50-வது ஆண்டு பொன் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது:-
இந்தப் பள்ளியில் என்னுடைய பேரன், பேத்தியும் கூட படித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு இங்கு வந்தவுடன் ஒரு எண்ணம் வந்தது. பேரனையும், பேத்தியையும் உடனே பார்த்தேன். நான் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலையில், அவர்களை அடிக்கடி என்னால் பார்க்க முடியாது. இது மாதிரி, பள்ளிக் கூட நிகழ்ச்சிக்கு வந்தால்தான் பார்க்க முடியும். அதற்காகவே அடிக்கடி பள்ளிக்கூடத்திற்கு வரவேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு வந்தது.
இந்தப் பள்ளியில் அவர்கள் படித்துக் கொண்டிருப்பது உள்ளபடியே எனக்குப் பெருமையாக இருக்கிறது. என்னுடைய பேரப் பிள்ளைகள் மட்டுமல்ல, இந்தப் பள்ளியிலே படிக்கக்கூடிய மாணவர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா மாணவர்களுமே என்னுடைய செல்வங்கள் தான், என்னுடைய அன்புக் குரியவர்கள் தான், என்னுடைய பாசத்திற்குரியவர்கள்தான்.
அதனால்தான் தரமான கல்விக்காக நமது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
கோடிங், ரோலாட்டிக்ஸ் போன்ற எதிர்காலத்திற்குத் தேவையான தொழில் நுட்பங்களையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி, திறன்மிகு மாணவர்களாக அவர்களை உருவாக்கக்கூடிய திட்டம்தான் அந்தத் திட்டம். என்னுடைய நெஞ்சுக்கு நெருக்கமான திட்டம் என்று அதைச் சொல்லலாம்!
கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றவன் நான். அதுதான் திராவிடச் சிந்தனை!
அந்தச் சிந்தனை யோடு செயல்படுவதால்தான் நமது அரசை, ‘திராவிட மாடல்’ அரசு என்று நான் சொல்லிக் கொண்டு வருகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.