டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கப் போகும் விராட் கோலி
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 2 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி நாளை மொகாலியில் தொடங்குகிறது.
இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு இது 100-வது டெஸ்ட் போட்டியாகும். இதையடுத்து அவருக்கு சக வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விராட் கோலியின் 100-வது டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் 50 சதவீதம் பேர் மைதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கோலி 8 ஆயிரம் ரன்னை கடக்க உள்ளார். அந்த ரன்னை தொட அவருக்கு இன்னும் 38 ரன்கள் தேவை. இந்த ரன்னை அவர் இலங்கை டெஸ்ட் தொடரில் எடுப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வீரர்களில் சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர், ஷேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் 8 ஆயிரம் ரன்னை கடந்துள்ளனர்.
8 ஆயிரம் ரன்னை கடக்கும் 6-வது இந்திய வீரர் என்ற சிறப்பை விராட் கோலி பெறவுள்ளார். கோலி இதுவரை 99 டெஸ்டில் விளையாடி 7,962 ரன் எடுத்துள்ளார். 27 சதம், 28 அரை சதம் அடித்திருக்கிறார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 254 ரன் குவித்தார். சராசரி 50.39 ஆகும்.
100-வது டெஸ்ட் விளையாடும் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வாழ்த்து கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி கேப்டனாக இருந்தபோது கேப்டன் பதவியின் சுமையால் அவரது பேட்டிங்குக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை காட்டினார். எல்லா இன்னிங்சிலும் அவர் சதம் அடித்தார்.எனவே கேப்டன் பதவி அவருக்கு சுமையாக இருந்ததாக நினைக்க வேண்டாம்.
ஒரு கேப்டனாக நீங்கள் மற்றவர்களை பற்றி அக்கறைபடுவீர்கள். இது இயல்பான விஷயம். உங்களது பந்து வீச்சாளர்களின் பார்ம்களை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு கேப்டனாக ரன்களை அடித்திருக்கலாம். ஆனால் எப்போதும் அணியில் உள்ள அனைவரையும் பற்றி கவலைப்படுவீர்கள். இதனால் பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியாது.
கேப்டனாக இல்லாததால் உங்கள் பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்த முடியும். இது மிகப்பெரிய நன்மையாகும் என்றார்.