Tamilவிளையாட்டு

கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் ருதுராஜ் கெய்க்வாட் அணியில் சேர்க்கப்படவில்லை

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் தொடரில் பங்கேற்பதற்காக ஆமதாபாத் வந்த இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இந்திய அணி வீரர்கள் தவான் , ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் இவர்களால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத நிலை உருவானது.கொரோனா பாதிப்புக்கு ஆளான தவன் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் ஏற்கெனவே குணமடைந்துவிட்டனர்.

இந்த நிலையில், தற்போது மற்றொரு துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டும் தொற்றிலிருந்து குணமடைந்துவிட்டார்.

எனினும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மூத்த தொடக்க வீரர் ஷிகர் தவான் துவக்க வீராக களம் இறங்குவார் என கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்கப்படவில்லை என தெரிகிறது.

நியூசிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். எனினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவருக்கு விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்க ருதுராஜ்  அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிரா திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.