Tamilசெய்திகள்

அண்டை நாடுகள் மூலம் அச்சுறுத்தல் – ஐ.நா சபையில் இந்தியா புகார்

ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ஆப்கானிஸ்தானில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையால் அதன் சுற்றுப்புறத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2008 ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் 2016 ல் பதான்கோட்டில் பயங்கரவாதச் செயல்கள் உட்பட எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தாக்குதலினால் ஏற்படும் மனித இழப்பை இந்தியா நன்கு அறிந்திருக்கிறது. இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதில் முழு உறுதியுடன் இந்தியா உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அண்டை நாட்டில் இருந்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தலை நாங்கள் தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வருகிறோம். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மாறிய அரசியல் சூழ்நிலையால் இந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகள் இன்று சமூக ஊடகங்கள், டிஜிட்டல் கட்டண முறைகள், ரகசிய செய்தி சேவைகள், கிரிப்டோ கரன்சிகள் மற்றும் ஆளில்லா விமான அமைப்புகள் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதாகவும்,  அவற்றை தடுத்து நிறுத்த பெரும்பாலான ஐ.நா.உறுப்பு நாடுகளிடம் போதுமான தொழில்நுட்ப திறன் இல்லை என்றும் டி.எஸ்.திருமூர்த்தி கூறியுள்ளார்.