இந்தியா – வங்காளதேச எல்லையில் நவீன வகை பாதுகாப்பு வேலியை அமைத்தது இந்திய எல்லை பாதுகாப்பு படை!
இந்தியா-வங்காளதேச எல்லையில் போதைப்பொருள், கால்நடைகளை கடத்துவோர் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு பெரும் சவாலாக உள்ளனர். இந்த பகுதியில் போடப்பட்டுள்ள வேலி பழையதாக வலு இழந்ததாக உள்ளதால் அதை துண்டித்து சட்ட விரோதமாக கடத்தல்காரர்கள் இந்திய எல்லைக்குள் புகுந்து விடுகின்றனர்.
இதை தடுக்கும் வகையில் நவீன வகை வேலியை எல்லைப் பாதுகாப்பு படை அமைத்துள்ளது. இதன்படி இந்த வேலியை யாரும் வெட்டவோ அல்லது ஏறி குதிக்கவோ முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்ட உழைப்பு மற்றும் வலுவுடன் இது இருக்கும் என வடக்கு வங்க எல்லை பாதுகாப்புப்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகள் இடையே வேலி இல்லாத பகுதியில் 110கிலோ மீட்டர் தூரம் தற்போது ஆன்டி கட்-ஆன்டி க்ளைம்ப் தடுப்பு வேலி அமைக்கப் பட்டுள்ளதாகவும், இது மொத்தமுள்ள 4,216 கிலோ மீட்டர் நீளமுள்ள முழு வேலி இல்லாத எல்லை மண்டலத்தையும் உள்ளடக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எல்லையில் குற்றவாளிகளை எதிர்த்துப் போரிடும் படையினருக்கு இது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.