நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கற்பழிப்பு குற்றவாளி சுட்டுக்கொலை
பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த தில்ஷாத் ஹுசைன் அவரது வழக்கறிஞரின் அழைப்பின்பேரில் கோரக்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். வழக்கறிஞரை சந்திப்பதற்காக அவர் காத்திருந்த நிலையில், திடீரென அங்கு வந்த ஒரு நபர், தான் வைத்திருந்த துப்பாக்கியால் தில்ஷாத்தின் தலையில் சுட்டார். இதையடுத்து சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். நீதிமன்ற வாசலில் இருந்த இரண்டு பாதுகாவலர்களும், உடனடியாக துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடித்தனர்.
இதன்பின் நடைபெற்ற விசாரணையில் சுட்டுக் கொல்லப்பட்ட தில்ஷாத் ஹுசைன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. அவரை சுட்டுக் கொன்ற நபர் பகவத் நிஷாத் என்பதும் ஓய்வு பெற்ற எல்லைப்பாதுகாப்பு படை வீரர் என்பதும் தெரிய வந்துள்ளது.
பகவத் நிஷாத் வீட்டின் அருகே சைக்கிள் கடை வைத்திருந்த தில்ஷாத் ஹுசைன், ஆளில்லாத நேரத்தில் பகவத் நிஷாத் மைனர் மகளை கடந்த 2020 ஆண்டு கடத்திச் சென்றுள்ளார். 2021 மார்ச் மாதம் ஐதராபாத்தில் தில்ஷாத்தை போலீசார் கைது செய்து, மைனர் பெண்ணை மீட்டனர். சிறுமி அளித்த பாலியல் பலாத்கார புகாரின்பேரில் தில்ஷாத் மீது போக்சோ உள்பட ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நீதிமன்றத்திறகு வருகை தந்த தில்ஷாத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையின் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.