Tamilசெய்திகள்

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் வெடிகுண்டு – டெல்லியில் பரபரப்பு

டெல்லியின் எல்லைப்புற பகுதியில் காசிப்பூர் மண்டி பகுதி உள்ளது. இங்கு மலர், காய்கறி, மீன் மற்றும் இறைச்சி சந்தைகள் செயல்படுகின்றன. இதில், மலர் சந்தையில் இன்று காலையில் ஒரு பை நீண்ட நேரம் கேட்பாரற்று கிடந்தது. இது பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, டெல்லி போலீசார் மற்றும் தேசிய பாதுகாப்பு படையின் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். சந்தை பகுதியை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். தீயணைப்பு வாகனங்களும் கொண்டுவரப்பட்டன. கேட்பாரற்று கிடந்த பையை வெடிகுண்டு நிபுணர்கள் திறந்து பார்த்தபோது அதில் ஒரு வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

அது ஐஇடி வகையைச் சேர்ந்த சிறிய அளவிலான வெடிகுண்டு என்றாலும், குடியரசு தின விழாவிற்கு முன்பாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சந்தை பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெடிபொருட்கள் சட்டத்தின்கீழ் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். செயலிழக்கச் செய்யப்பட்ட வெடிபொருட்களின் மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.