பிரதமர் செல்லும் பாதை பற்றிய தகவலை வழங்கியது யார்? – மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி
பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி குறித்த விவகாரத்தில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடையே வாக்குவாதம் வலுத்துள்ளது.
இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்புப் படைக்கு தவறான அனுமதி வழங்கியது யார், பிரதமர் செல்லவிருந்த பாதை குறித்த தகவல்களை வெளியிட்டது யார் என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று பஞ்சாப் மாநில அரசை மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி வலியுறுத்தி உள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் அரசிடம் பாஜக தொண்டர்களாகிய நாமும், தேசமும் கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில், பிரதமரின் பாதுகாப்பு டிஜிபி ஏன் அங்கு செல்ல விரும்பினார் என்பதுதான். மேம்பாலத்தின் மேல் இருந்த நபர்களுக்கு பிரதமரின் பாதை பற்றிய தகவலை வழங்கியவர் யார்?
தற்போது பகிரங்கமாக உள்ள காணொளி ஆதாரங்கள் இந்த கேள்விகளை முன்வைக்கின்றன. இந்திய மக்களின் ஆசியுடன் மோடி பிரதமரானார் என்பதை காங்கிரஸ் கட்சி உணர வேண்டும். நமது நாட்டின் வரலாற்றில் இதற்கு முன் ஒருபோதும் பிரதமரின் பாதுகாப்பைப் பாதுகாக்க எந்த அரசு தவறியதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் தொடர்பாக பஞ்சாப் காங்கிரஸ் அரசை, அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாகர் குறை கூறியுள்ளார்
பிரதமர் பாதுகாப்பு குறைபாடு ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பஞ்சாபியத்துக்கு எதிரானது. பெரோஸ்பூரில் பாஜகவின் அரசியல் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் உரையாற்றுவதற்கான பாதுகாப்பான வழியை உறுதி செய்திருக்க வேண்டும். பஞ்சாப்பில் ஜனநாயகம் இப்படித்தான் செயல்படுகிறது இவ்வாறு சுனில் ஜாகர் தமது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.