மாஸ்க் அணிவதை கெளரவமாக நினைக்க வேண்டும் – இசை வெளியீட்டு விழாவில் கமல் பேச்சு
ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் சார்பில் அஜ்மல் கான், ரெயா மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் படம் ’சில நேரங்களில் சில மனிதர்கள்’. அறிமுக இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கும் இப்படத்தில் அஷோக் செல்வன், அபி சரவணன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரெயா ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்க, நாசர், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், பானுப்ப்ரியா, அனுபமா குமார் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
’அர்ஜுன் ரெட்டி’ புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் பாடல்களை சினேகன் மற்றும் மிர்ச்சி விஜய் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இசை குறுந்தகடை வெளியிட்டார். மேலும், இயக்குநர்கள் வெற்றிமாறன், பிரபு சாலமன், கஸ்தூரிராஜா, ராஜேஷ் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், “இங்கு பேசியவர்கள் பஸ்ஸில் போகும் போது எட்டி பார்த்ததாக சொன்னார்கள். அனைவரும் அப்படித்தான். இந்த மேடையில் நிற்கும் நான் உட்பட, சிவாஜி சார் உட்பட அனைவரும் அவர் அவர் காலக்கட்டத்தில், பஸ்ஸில் போகும் போது இது நடக்குமா என்று வியந்தவர்கள் தான். சினிமா ரசனைக்கு கொஞ்சென்றும், மோப்பென்றும் தெரியாது. நெருப்புனா நெருப்பு தான். அது புடிச்சதுனா உங்களுக்கு பத்திக்கும். அப்படி புடிச்ச நெருப்பு இங்கு எத்தனை என்று என்னால் சொல்ல முடியாது. டீ கடையில் இருந்து இங்கு உங்களால் வர முடியும் என்றால், இங்கிருந்து அடுத்த பயணத்தை உங்களால் தொடர முடியும் என்று தான் நம்புகிறேன். எந்த டீ கடையில சாப்பிடுறீங்க என்று போய்டாதீங்க, அந்த டீயில் சுவை சேர்த்தது இவர்களுடைய ஆர்வம் தான். எந்த டீ கடையில் உட்கார்ந்து குடிச்சிருந்தாலும் இங்க வந்து சேர்ந்திருப்பார்கள். அதுக்கு காரணம் நட்பு மட்டும் அல்ல, அவர்களுடைய ஆர்வமும் திறமையும் தான். அது தான் அவர்களை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இங்கு சாதி கிடையாது, மதம் கிடையாது அது தான் உண்மை. அதை சிலர் மறுக்கலாம், அதை பத்தி எனக்கு கவலை இல்லை. இங்கு விளக்கை அனைத்து விட்டால் சாதி இல்லை. இந்த திரை மட்டும் தான்.
பாலுமகேந்திரா எனக்கு வாத்தியர் என்று தெரியாமலே இருந்தேன். முதலில் அவரை நண்பராக நினைத்து, “என்ன பாலு சொல்லுங்க” என்று சொல்லி வந்தேன், பிறகு தான் தெரிந்தது அவர் எனக்கு வாத்தியார் என்று. அதுபோல் நிறைய பேர் இருக்கிறார்கள். என்னை விட வயது குறைந்தவர்கள் கூடா இருக்கிறார்கள். அதனால் கற்றுக்கொள்வதற்கு காலகட்டம் கிடையாது. வாழ்க்கை தொடர்ந்து கற்றுக்கொடுத்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், நாம் தான் கர்வத்தில் அதை உதாசினப்படுத்துகிறோம் என்பதை நான் உணர்ந்த உண்மை.
இங்கே, சில நேரங்களில் சில மனிதர்கள், என்று சொல்லும் போது உங்களுக்கு அருகதை இருக்கா, என்று கேட்பார்கள். கண்டிப்பாக அப்படி யாரும் கேட்க மாட்டார்கள், ஜெயகாந்தனே கேட்க மாட்டார். எடுத்துக்காட்டாக என்னையே சொல்றேன், குறுதிப்புனல் என்ற தலைபு இபா எழுதிய நாவலின் தலைப்பு. நான் அதை படத்திற்கு வைக்கும் போது அவரிடம் அனுமதி கேட்க சொன்னேன். அப்போது அவர், “அது கம்பராமாயணத்தில் இருக்குங்க, ஏன் கிட்ட எதற்கு அனுமதி கேக்குறீங்க, அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” என்று சொன்னார். இந்த மாதிரி பெரிய மனிதர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள், இந்த மேடையிலும் இருப்பார்கள். எங்களை பார்த்து தயவு செய்து வியந்து விடாதீர்கள். அதே சமயம், எங்க தவறை வெளியே காட்டிக்கொடுகாதீங்க. ஆனால், அதை உணர்ந்து நீங்க செய்யாமல் இருக்கங்கள். அதை தான் நான் சொல்ல முடியும்.
இசையமைப்பாளர் பெயரில் நான் கூட குழப்பமடைந்தேன், பிறகு தான் தெரிந்தது அவர் தாயார் பெயரை சேர்த்து வைத்துள்ளார். அவருடைய தாயாருக்கு என் வணக்கங்கள். ஒருத்தர் நிலாவை காட்டுவார்கள், குரங்கை காட்டுவார்கள், அப்படி என்னை ஒரு சந்துவாக காண்பித்து ரதனின் தாயார் அவருக்கு சோரு ஊட்டியிருக்கிறார். இதுல கொஞ்சம் காட்சிகளை நான் பார்த்தேன். அதில் எதார்த்தம் தெரிந்தது. பாடல் காட்சிகளை வைத்து படத்தை சொல்ல முடியாது. எங்களுக்கெல்லாம் கதை சொல்வதில் பெரிய தடங்களாக வருவதே இந்த இசைப்படால்கள் தான். இதை சொன்னால் இந்த விழா நடத்துபவர்கள் கோவித்துக்கொள்வார்கள். இசையமைப்பாளர் ரதேனே கூட கோவித்துக்கொள்வார். ஆனால், அதை எப்படி கதையுடன் கலப்பது என்பதை எங்கள் முன்னோர்கள் அற்புதமாக சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். கதையின் போக்கு கெடாதபடி பாடல்களை பயன்படுத்தும் வித்தையை பாலச்சந்தர் சார் போன்றவர்கள் பிரதமாதமாக செய்வார்கள். வர்த்தகம் சார்ந்த விஷயம் என்பதால் பாடல் காட்சிகள் தற்போது வரை திரைப்படங்களில் தொடர்ந்துக்கொண்டு இருக்கிறது.
பாடல் காட்சிகள் எப்படி என்பதை நான் சிறு உதாரணத்தோடு சொல்கிறேன். குறுந்தகடு, கேசட், சிடி என்று வந்த இசை தற்போது நேரடியாக டிஜிட்டலில் வந்துவிட்டாலும், இதுபோன்ற இசை நிகழ்ச்சிகளில் புகைப்படத்திற்காக, பழைய பாணியில் குறுந்தகடை வெளியிடுகிறோம். அதுபோல தான் திரைப்படங்களில் இப்போதும் பாடல்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. அது எதற்காக என்று எங்களுக்கே புரியல. இதை இப்போது சொல்லவில்லை, நான் 19 வயதில் இருந்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். எண்ணிக்கை குறைந்ததே தவிர, பாட்டு போகவில்லை. ஆனால், இதுவரை தமிழில் முழுமையாக ஒரு மியூசிக்கல் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. இது மற்ற இயக்குநர்களுக்கு சவால் இல்லை, ஆனால் கேட்பவர்கள் நான் எடுக்கிறேன், என்று வருவார்கள் என்பதற்காக தான் சொல்கிறேன். மியூசிக்கல் எடுப்பது அவ்வளவு சுலபம் இல்லை. அதற்கு நிறைய ஒத்திகை பார்க்க வேண்டும், பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
முன்னேற்பாடு என்று சொல்லும் போது, இந்த அரங்கத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கோவிட் போய் விடும், இனிமே நல்லபடியாக இருக்கும் என்பது நல்ல எண்ணம் தான், ஆனால் அஜாக்கரதையாக இருக்க கூடாது. நான் ஜாக்கிரதையாக தான் இருந்தேன், அப்படி இருந்தும் எங்கேயோ இருந்து வந்துவிட்டது. ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நம்ம ஊர் குப்பத்துலயும், இடுப்பு அளவு தண்ணீரிலும் நடந்து சென்ற போதெல்லாம் வராதது, அமெரிக்கா மற்றும் துபாய் ஏர்போட்டில் தான் எனக்கு வந்தது. அதற்காக, அந்த இடங்களை குறை சொல்லவில்லை, எங்கிருந்து வரும் என்பது தெரியாது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். செருப்பு போடுவதை எப்படி கெளரவமாக நினைத்து விட்டீர்களோ, அதுபோல் மாஸ்க் போடுவதையும் கெளரவமாக நினைத்துக்கொள்ளுங்கள். அழகு கெட்டுவிடும் என்று நினைக்க வேண்டாம், உள்ளுக்குள்ள அழகு இருந்தா அதை எப்போது வேண்டுமானாலும் காட்டிக்கொள்ளலாம். அதனால் ஆரோக்கியம் தான் அழகு. நான் ஏன் இப்படி சொல்கிறேன் என்றால், இடைவெளி என்ற பெயரில் தியேட்டிரில் பாதி சீட்டை தூக்கிடுவாங்க, பிறகு அது நமக்கு தான் பாதிப்பு. மாஸ்க் போட்டால் அந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். சுயநலம் என்று நீங்கள் சொல்லலாம், நீங்கள் நலமாக இருந்தால் தான் நாங்கள் வாழ்க்கையே நடத்த முடியும் என்பது தான் உண்மை.
இந்த படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் நல்ல உழைப்பாளி. குறுகிய காலத்தில் வந்துவிட்டார் என்று நான் சொல்ல மாட்டேன். அவரை கேட்டால் தெரியும் எத்தனை வருடங்கள் காத்திருந்தார் என்று. இசையமைப்பாளர் ரதன் பேசும்போது, என்னை தெலுங்கு பையன் என்று நினைத்துவிட்டார்கள், நான் தமிழ் பையன் என்று சொன்னார். இசைக்கு மொழி தேவையில்லை. நீங்கள் யார் என்று உங்கள் தாய் சொல்வார். உங்களுக்கு தைரியம் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி. உங்களை இந்த மேடை வரை அனுப்பி வைத்த அவருக்கு நன்றி சொன்னீர்கள். அவரை எனக்கு நன்றாக தெரியும், ஊக்கம் அளிப்பதில் அவர் சிறந்தவர். இந்த படத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்.” என்றார்.
முன்னதாக பேசிய இயக்குநர் விஷால் வெங்கட் உள்ளிட்ட படக்குழுவினர், கல்லூரி காலங்களில் டீ கடையில் ஆரம்பித்த எங்கள் சினிமா பேச்சு, தற்போது இந்த படத்தில் ஒன்றினைத்துள்ளது. நண்பர்கள் மூலம் உருவான இப்படம் நிச்சயம் ரசிகர்களை கவரும், என்று நம்புகிறோம், என்று பேசினார்கள்.