வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தம் – பல ஆயிரம் கோடி ரூபாய் செக் பரிவர்த்தனை பாதிப்பு
இந்தியாவில் 12 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட்டு தற்போது வருகின்றன. இது தவிர 16 தனியார் வங்கிகளும் இயங்குகின்றன.
இந்த நிலையில் வங்கி வாராக்கடன் பாதிப்பால் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை மீண்டும் தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
இதற்கான மசோதாவை தற்போது நடைபெறுகின்ற பாராளுமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்ய உள்ளது. தனியார் மயமாக்கும் மசோதாவை தாக்கல் செய்யக்கூடாது என அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களுடன் மத்திய அரசு நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. கொரோனா பாதிப்புள்ள இந்த சூழ்நிலையில் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் எடுத்துரைக்கப்பட்டது.
ஆனால் தனியார் மயமாக்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் தற்போது தாக்கல் செய்யப்படாது என்பதை உறுதி செய்தால் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி நாடு முழுவதும் 2 நாட்கள் வேலை நிறுத்தம் நடக்கிறது. நாளை (16-ந்தேதி) தொடங்கி 17-ந் தேதிவரை 48 மணிநேரம் தொடர் வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், கிளை மேலாளர்கள் ஈடுபடுகிறார்கள்.
இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கக்கூடும். பணம் டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், காசோலை பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து பரிவர்த்தனைகளும் பாதிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-
வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. வளர்ந்து வரும் இந்திய நாட்டில் மக்கள் சேமிப்பு அரசின் மேற்பார்வையில் இருக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் வங்கிகளில் மக்கள் ரூ.157 லட்சம் கோடி வைப்புத் தொகையாக வைத்துள்ளனர். இந்த சேமிப்புக்கு பாதுகாப்பு பொதுத்துறை வங்கிகளே காரணம். பல தனியார் வங்கிகள் தவறாக நடத்தப்பட்டு மூடப்பட்டதன் விளைவாக மக்கள் தங்கள் சேமிப்பை இழந்து வந்தனர்.
அதற்கு மாற்றாகவே வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு மக்கள் சேமிப்புக்கு பாதுகாப்பு ஏற்பட்டது. இன்று வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதால் மக்கள் சேமிப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. காரணம் தனி முதலாளிகள் மக்கள் சேமிப்பை தங்கள் சொந்த தொழிலுக்காகவும், கூடுதல் லாப வேட்டைக்காகவும் செலவிடும் ஆபத்து ஏற்படும்.
அதேபோன்று 75 ஆண்டுகளுக்கு பிறகும் இந்திய பொருளாதாரம் பல துறைகளில் மேலும் முன்னேற வேண்டி உள்ளது. குறிப்பாக விவசாயம், கிராமப்புற வளர்ச்சி, வேலை வாய்ப்பு திட்டங்கள், வறுமை ஒழிப்பு திட்டங்கள், பெண்கள் முன்னேற்றக் கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டுமானம் போன்ற துறைகளுக்கு கூடுதலாக கடன் அளித்து இந்திய நாட்டை மேலும் வளர்க்க அவசியம் உள்ளது.
இந்த துறைகளுக்கு முன்னுரிமையாக கடன் கொடுப்பதே பொதுத்துறை வங்கிகளே. வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் இந்த துறைகளுக்கு கடன் மறுக்கப்பட்டு இந்தியாவின் அடிப்படையான வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.
எனவே பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்பது பிற்போக்கான நடவடிக்கை ஆகும். அதே போல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
வங்கிகள் தனியார்மயம் செய்யப்பட்டால் வேலைவாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும். மேலும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு இளைஞர்களுக்கு பொதுத்துறை வங்கிகளில் இன்று அளிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு கொள்கை கைவிடப்படும். இது சமூக நீதிக்கு எதிராக அமையும். எனவே பொதுத்துறை வங்கிகளை மேலும் பலப்படுத்தி கிராமப்புறங்களிலும் திறந்து மக்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களாக வளர்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதை விடுத்து இந்த பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க முயல்வது தவறான முடிவாகும். வங்கிகளில் இன்று உள்ள முக்கிய பிரச்சனை பெருகி வரும் வாராக்கடன்கள் ஆகும். சுமார் ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு கொடுத்த கடன்களை பெரும் முதலாளிகளிடம் இருந்து திரும்பப் பெற வேண்டி உள்ளது.
வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால் வாராக்கடன் பட்டியலில் உள்ள பெரும் முதலாளிகளே வங்கிகளை வாங்கும் ஆபத்து ஏற்படும். எனவே அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும். இந்த மசோதாவை நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய வேண்டாம் என்று தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் அரசு அதை ஏற்க முன்வரவில்லை. எனவே அறிவித்தபடி வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும். இந்த வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் வங்கிக் கிளைகள் மூடப்படும் நிலை உருவாகும். இதனால் வாடிக்கையாளர்கள் சேவை பாதிக்கப்படும்.
ஏ.டி.எம். மையங்கள் பல இடங்களில் செயல்படாத நிலை ஏற்படும். அதேபோல காசோலை பரிவர்த்தனை போன்ற சேவைகளும் தடைபடும். தென்னிந்திய அளவில் சென்னையில் இயங்கும் காசோலை பரிவர்த்தனை நிலையத்தில் ரூ.5,400 கோடி பெருமானமுள்ள 5 லட்சம் காசோலைகள் தேங்கும் சூழல் உருவாகும்.
பொது மக்களின் நன்மைக்காக வங்கிகள் செயல்பட வேண்டும். அவர்களின் சேமிப்புக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்றால் அனைத்து பகுதி மக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்து மத்திய அரசின் தவறான முடிவை வாபஸ் பெற உதவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.