ஜம்மு-காஷ்மீர் சட்டசபை கலைப்பு – கவர்னர் அதிரடி
காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. ஆனால், ஆளும் கூட்டணி கட்சிகளுக்குள் இருந்து வந்த கருத்து மோதல் ஒருகட்டத்தில் பகிரங்கமாக வெடித்தது.
அதன் பின்னர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பா.ஜ.க. அறிவித்தது. இதனால் தனது முதல் மந்திரி பதவியை மெகபூபா முப்தி உடனடியாக ராஜினாமா செய்தார். ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கப்போவதில்லை என்று பா.ஜ.க.வும் அறிவித்து விட்டது.
இதையடுத்து 20-6-2018 முதல் ஜம்மு காஷ்மீரில் கவர்னர் ஆட்சி அமலுக்கு வந்தது. தற்போது நடைபெற்றுவரும் கவர்னர் ஆட்சியை ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்க முடியாது என்னும் நிலையில் காங்கிரஸ் மற்றும் உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சியின் ஆதரவுடன் இங்கு மீண்டும் ஆட்சி அமைக்க மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி திட்டமிட்டது.
இன்று மெகபூபா முப்தி மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னர் சத்தியபால் மாலிக்கிடம் கடிதம் கொடுத்தார். இந்நிலையில் கவர்னர் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையை கலைப்பதாக உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு சட்டம் வழங்கிய விதிகளின் அடிப்படையில் சட்டசபையை கவர்னர் கலைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.